×

கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு திருப்புத்தூர், குன்றக்குடியில் சூரசம்ஹாரம் * ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு * இன்று முருகனுக்கு திருக்கல்யாணம்

திருப்புத்தூர், நவ. 14: திருப்புத்தூர் சிவகாமி உடனாய திருத்தளிநாதர், யோக பைரவர் கோயிலில் சஷ்டி விழாவை முன்னிட்டு நேற்று முருகப்பெருமான் அசுரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடந்தது. இன்று காலையில் சுப்பிரமணியசுவாமிக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. கடந்த நவ. 8ம் தேதி கந்தசஷ்டியின் முதல் நாள் விழா துவங்கியது. முதல் நாள் முதல் தினந்தோறும் மாலையில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. 6ம் நாள் விழாவான நேற்று காலை 10.30 மணியளவில் முருகப்பெருமானுக்கு சண்முகா அர்ச்சனையும், சிறப்பு அபிஷேக, தீபாராதனைகளும் நடந்தது. மாலையில் முருகப்பெருமான் திருத்தளிநாதர் கோயிலில் இருந்து புறப்பட்டு சிவகாமி அம்மன் சன்னதி சென்று வேல் வாங்கினார். பின்னர் கீழரதவீதி பிள்ளையார் தேர் அருகே அசுரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடந்தது. பின்னர் மஞ்சள் நீர் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து முருகப்பெருமானுக்கு தீபாராதனை நடந்தது. பின்னர் முருகப்பெருமான் திருவீதி உலா வந்தார். இதில் சஷ்டி விரதம் மேற்கொண்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 7ம் நாள் விழாவான இன்று காலையில் திருமுருகன் திருப்பேரவையிலிருந்து திருமணத்திற்கு பக்தர்கள் சீர்வரிசை எடுத்து வருவார்கள். பின்னர் சுப்பிரமணிய சுவாமியும், தெய்வானை அம்பாளும் திருநாள் மண்டபத்தில் திருமண கோலத்தில் எழுந்தருளுவார்கள். அதனை தொடர்ந்து 10.30 மணி முதல் 12.00 மணிக்குள் திருக்கல்யாண வைபவம் நடைபெறும். ஏற்பாடுகளை கந்த சஷ்டி விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

குன்றக்குடி: காரைக்குடி அருகே குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் கந்தசஷ்டி விழா கடந்த 7ம் தேதி தேவரகசியத்துடன் துவங்கியது. 8ம் தேதி  முதல்நாள் விழாவை முன்னிட்டு ஆறுமுகச் செவ்வேள் எழுந்தருளல், சூரபத்மன் எதிரெழுந்து வரல் நிகழ்ச்சியும், அதனை தொடர்ந்து 9ம் தேதி முதல் 12ம் தேதி வரை ஆறுமுகச் செவ்வேள், சூரபத்மன், தாரகன், சிங்கமுகன் எதிரெழுந்து வரல் நிகழ்ச்சி நடந்தது.  6ம் நாளான நேற்று ஆறுமுகச் செவ்வேள் எழுந்தருளல் நிகழ்ச்சியும், மாலை 4.35க்கு ஆறுமுகச்செவ்வேள் அம்மையிடம் சக்திவேல் வாங்குதல். மாலை 5 மணிக்கு வெள்ளி ரதத்தில் ஆறுமுகச் செவ்வேள் எழுந்தருளல். 5.30 முதல் 6.30க்குள் சூரனை தடிதலும் ஆட்கொள்ளலும் (சூரசம்காரம்) நடந்தது.  இதனை தொடந்து வெள்ளி ரதம், மூஞ்சூறு வாகனம், யானை வாகனம், வெள்ளி மயில் வாகனம், குதிரை வாகனம் மற்றும் கடா வாகனங்களில் ஆறுமுகச் செவ்வேள், விநாயகர், பாலசுப்பிரமணியர், முத்துக்கந்தர், வீரவாகு தேவர், தண்டாயுதபாணி ஆகியோர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இன்று காலை 11 மணிக்கு திருமுழுக்காட்டும் (மகாபிஷேகம்) மாலை 6 மணிக்கு 6.45க்கு தெய்வயானை திருக்கல்யாணமும், இரவு 8 மணிக்கு தங்கரதத்தில் ஆறுமுகச் செவ்வேள் எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது.  குன்றக்குடி ஆதீனம் தவத்திரு பொன்னம்பல அடிகளார் தலைமையில் விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்து. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags : devotees ,festival ,Kundrakudi ,Kundasakti ,
× RELATED திருப்பதி, சித்தூர், ஸ்ரீகாளஹஸ்தியில் யுகாதி பண்டிகை கோலாகல கொண்டாட்டம்