திருப்பூரில் வணிக வரித்துறை அலுவலகம் அமைக்க வேண்டும்

திருப்பூர், நவ.14: திருப்பூரில் வணிகவரித்துறையின் மண்டல அலுவலகம் துவங்க வேண்டும் என திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது குறித்து அதன் தலைவர் ராஜாசண்முகம் தமிழக வணிக வரித்துறை அமைச்சருக்கு அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது: திருப்பூர், ஈரோடு, கரூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய ஈரோட்டில் வணிகவரித்துறை மண்டல அலுவலகம் துவங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. திருப்பூர் மாவட்டத்தில் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள், சிறு, குறு, நடுத்தர ஆடை உற்பத்தி என 8 ஆயிரத்து 350 நிறுவனங்கள் இயங்கி வருகிறது. 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பின்னலாடை உற்பத்தியை நம்பி உள்ளனர்.

ஆயிரக்கணக்கான பஞ்சாலைகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்க்கின்றனர். பல்லடம், சோமனுார், அவிநாசி, தாராபுரம், காங்கயம் ஆகிய பகுதிகளில் ஆடை சார்ந்த சிறு, குறு ஜாப்-ஒர்க் நிறுவனங்களும், விசைத்தறி, கைத்தறி கூடங்கள் இயங்கி வருகிறது. ஈரோட்டை விட திருப்பூரில்தான் ஆடை சார்ந்த நிறுவனங்கள் ஏராளமாக உள்ளன. திருப்பூர் மாவட்டத்தில் இருந்து ஆடை சார்ந்த  உற்பத்தி நிறுவனங்கள் மூலம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி, உள்நாட்டு வர்த்தகம் என ஆண்டுக்கு ரூ.42 ஆயிரம் கோடி வர்த்தம் நடக்கிறது. இது 2022ம் ஆண்டுக்குள் ரூ.ஒரு லட்சம் கோடி என்ற இலக்கோடு உற்பத்தியை அதிகரித்து வருகிறோம்.  

சிறு, குறு நிறுவனங்கள் ஏராளமாக உள்ள திருப்பூரில் வணிகவரித்துறையின்  மண்டல அலுவலகம் துவங்க மாநில வணிகவரித்துறை அமைச்சர் வீரமணி, முதன்மை செயலாளர் சோமநாதன் ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related Stories: