சாக்கடை கால்வாய் கட்ட கோரி மண்டல அலுவலகம் முற்றுகை

அவிநாசி, நவ.14: திருப்பூர் 7வது வார்டு குடியிருப்பு பகுதியில் சாக்கடை  கால்வாய் கட்டகோரி மண்டல அலுவலகத்தை பொதுமக்கள் நேற்று முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  திருப்பூர் மாநகராட்சி அவிநாசிகவுண்டம்பாளையத்தை அடுத்த பாலு இன்னோவேசன் குடியிருப்பு பகுதியில் 70க்கும் மேற்பட்ட  குடும்பங்கள் வசித்து வருகின்றன. கடந்த  3  ஆண்டுகளுக்கு முன் அந்த பகுதியில் கழிவுநீரை வெளியேறும் வகையில் மாநகராட்சி  சார்பில் ரூ.25 லட்சம் செலவில் சாக்கடை  கால்வாய் கட்டப்பட்டது.

ஆனால், கால்வாய் மூடப்படாமலும், போதிய பராமரிப்பு இல்லாமலும் இருப்பதால் குப்பைகள் அடைத்து கழிவுநீர் வெளியேறாமல் தேங்கி கொசு  உற்பத்தியாகிறது. இந்  நிலையில், கடந்த 3  மாதங்களுக்கு  முன்பு காந்திநகர், அங்கேரிபாளையம், ஏ.வி.பி. ஜே.எஸ்.கார்டன்  உள்ளிட்ட  பகுதிகளில் இருந்து வரும் கழிவுநீரை, பாலு  இன்னோவேசன் பகுதியில் உள்ள சாக்கடை  கால்வாயுடன்  இணைத்து  நல்லாற்றுப்பாளையம்  ஓடையில்  சென்று கலக்கும் வகையில் ஏற்கனவே புதிய  கால்வாய் கட்டப்பட்டுள்ளது.

ஆனால், இந்த கால்வாயின் ஆழம் குறைவாக  இருப்பதால் மழை தண்ணீர் தேங்கி  பாலு  இன்னோவேசன் பகுதியில் இருந்து  கழிவுநீர் வெளியேற  முடியாமல்  2  அடி  ஆழத்திற்கு  கழிவுநீர் தேங்கி உள்ளது.  இதனால் சுகாதார சீர்கேடு  ஏற்பட்டு அப்பகுதியை  சேர்ந்த  சிலர் மர்ம  காய்ச்சலால்  பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், மண்டல அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.மனுவை  பெற்று கொண்ட மாநகராட்சி உதவி ஆணையர் வாசுக்குமார்  அந்த  பகுதியில்  தேங்கி  உள்ள கழிவுநீரை  உடனடியாக  அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சாக்கடை  கால்வாய்  பிரச்னையை நேரில்  சென்று ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Related Stories: