×

தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்குகிறது வரும் 23ம் தேதி மகா தீபம் திருவண்ணாமலை கார்த்திகை

திருவண்ணாமலை, நவ. 14: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் கார்த்திகை தீபத்திருவிழா கோடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக தொடங்குகிறது. நினைக்க முக்தித் தரும் திருத்தலமாக திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில், பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக அமைந்திருக்கிறது. ஆண்டுதோறும் இங்கு நடைபெறும் கார்த்திகை தீபத்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். திருமாலுக்கும், பிரம்மாவுக்கும் இடையே தங்களில் ‘யார் பெரியவர்’ என்றெழுந்த அகந்தையை அகற்றுவதற்காக, அடிமுடி காணாத ஜோதிப்பிழம்பாக சிவபெருமான் எழுந்தருளியதையும், உமையாளுக்கு இடபாகம் வழங்கி அர்த்தநாரீஸ்வரராக அருள்பாலித்ததையும் நினைவுகூறும் வகையில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் தீபத்திருவிழா நடைபெறுகிறது.

அதன்படி, அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்குகிறது. அதையொட்டி, அதிகாலை 5 மணி முதல் 6.15 மணிக்குள், கோயில் 3ம் பிரகாரத்தில் சுவாமி சன்னதி எதிரில் அமைந்துள்ள தங்க கொடி மரத்தில் வேதமந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடைபெறும். அப்போது, அபிஷேகம், ஆராதனை, தீபாரதனை முடிந்து, அலங்கார ரூபத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். அதைத்தொடர்ந்து, வெள்ளி விமானங்களில் பஞ்சமூர்த்திகள் மாட வீதியில் பவனி நடைபெறும். மேலும், இரவு உற்சவத்தில் வெள்ளி அதிகார நந்தி வாகனத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் பவனி வருகிறார்.

தீபத்திரு விழா நடைபெறும் 10 நாட்களும், காலை மற்றும் இரவு நேரங்களில் சுவாமி திருவீதியுலா மாட வீதியில் நடைபெறும். விழாவின் 6ம் நாளான வரும் 19ம் தேதி இரவு வெள்ளித் தேரோட்டமும், 7ம் நாளான 20ம் தேதி மகா தேரோட்டமும் நடைபெற உள்ளது. கார்த்திகை தீபத்தின் முக்கிய விழாவான மகா தீப பெருவிழா, வரும் 23ம் தேதி வெள்ளிக்கிழமையன்று நடைபெறுகிறது. அதையொட்டி, அன்று அதிகாலை 4 மணிக்கு, அண்ணாமலையார் கோயிலில் ‘ஏகன் அநேகன்’ எனும் தத்துவத்தை விளக்கும் வகையில் பரணி தீபம் ஏற்றப்படும்.

அதைத்தொடர்ந்து, அன்று மாலை 6 மணிக்கு, இறவனின் திருமேனியான சுயம்பு வடிவில் எழுந்தருளியிருக்கும் 2,668 அடி உயர அண்ணாமலை மீது மகாதீபம் ஏற்றப்படும். அதைத்தொடர்ந்து, மலைமீது 11 நாட்கள் மகா தீபம் காட்சிதரும். மகா தீபம் ஏற்ற 3,500 கிலோ நெய், ஆயிரம் மீட்டர் திரி (பருத்தி துணி) பயன்படுத்தப்படும். மகா தீபத்தை தரிசிக்க, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் சுமார் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதையொட்டி, வடக்கு மண்டல ஐஜி நாகராஜன் மேற்பார்வையில், சுமார் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும், 2650 சிறப்பு பஸ்கள், 14 சிறப்பு சிறப்பு ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. நகருக்குள் வாகன நெரிசலை தவிர்க்க, 16 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்படுகிறது. கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு, அண்ணாமலையார் கோயில் முழுவதும் வண்ண சர மின் விளக்குளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. திருவண்ணாமலை நகரம் விழாக்கோலமாக காட்சியளிக்கிறது.

Tags : Deepavathiruvallu ,Deepavannai Karthikai ,Onam ,
× RELATED ஓணம் ஸ்பெஷல் அடை பிரதமன்