கழிவறைக்குள் 3மணி நேரம் தவித்த மாணவி வாணியம்பாடியில் பொதுமக்கள் முற்றுகை பள்ளியை ஆசிரியர்கள் பூட்டிச்ெசன்றதால்

வாணியம்பாடி, நவ. 14: பள்ளியை ஆசிரியர்கள் பூட்டிச்சென்றதால் 1ம் வகுப்பு மாணவி கழிவறைக்குள் 3மணி நேரம் தவித்தார். இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர், பொதுமக்கள் நேற்று பள்ளியை முற்றுகையிட்டனர். வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த பஷீராபாத் பகுதியில் நகராட்சி பெண்கள் நடுநிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 270 மாணவிகள் படித்து வருகின்றனர். தலைமை ஆசிரியை உள்பட 13 பேர் ஆசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர். இதே பகுதியை சேர்ந்தவர் நதீம்(30), ேசலைகளுக்கு பூ டிசைன் செய்யும் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஷபீனா. இவர்களது மகள் தமீமா(5) அங்குள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளியில் 1ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் தமீமா பள்ளிக்கு சென்றார். மாலை 3.30 மணியளவில் தமீமா பாத்ரூம் சென்று வருவதாக கூறிவிட்டு கழிவறைக்கு சென்றாராம். ஆனால் இதனை கவனிக்காத ஆசிரியர்கள், பள்ளியை பூட்டிவிட்டு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

சிறிது நேரத்தில் கழிவறை கதவை திறக்க முயன்றபோது பூட்டப்பட்டிருப்பதை அறிந்து மாணவி அதிர்ச்சி அடைந்தார். கழிவறை கதவை பலமுறை தட்டியும் திறக்காததால் பயந்துபோன தமீமா உள்ளேயே அமர்ந்திருந்தாராம். மாலை நீண்ட நேரமாகியும் மகள் வராததை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் பல இடங்களில் தேடினர். உடன் சென்றவர்களிடம் கேட்டனர். ஆனால் அவர்கள் தங்களுக்கு தெரியவில்லை என தெரிவித்தனராம். இந்நிலையில், இரவு 7 மணியளவில் பள்ளி அறையில் இருந்து சிறுமி அழுதபடி கதவு தட்டும் சத்தம் அக்கம் பக்கத்தினருக்கு கேட்டது. இதனால் சந்தேகமடைந்த அவர்கள் மற்றும் நதீம் ஆகியோர் சுவர் ஏறி குதித்து உள்ளே சென்று பார்த்தபோது கழிவறையில் சிறுமி தமீமா அழுதபடியே நின்றிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே மாணவியை மீட்டு வெளியே கொண்டு வந்து சமாதானப்படுத்தினர்.

இந்நிலையில், கழிவறையில் குழந்தை இருப்பது தெரியாமல் அலட்சியமாக நடந்து கொண்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி குழந்தையின் பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்கள் நேற்று காலை பள்ளியை திடீரென முற்றுகையிட்டனர். அப்போது பள்ளிக்கு வழக்கம்போல் தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர்கள் வந்தனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையேற்று அனைவரும் கலைந்து சென்றனர். இதையடுத்து பள்ளி வழக்கம்போல் இயங்கியது. 1ம் வகுப்பு மாணவி கழிவறையில் சிக்கி சுமார் 3 மணி நேரம் கழித்து மீட்கப்பட்ட சம்பவம் பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: