பொதுபயன்பாட்டு வாகனங்களில் அவசர கால பட்டன், ஜிபிஎஸ் கருவி கட்டாயம் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தகவல் நாடு முழுவதும் ஜனவரி 1 முதல்

வேலூர், நவ.14: ஜனவரி 1ம் தேதி முதல் பதிவாகும் பொதுமக்கள் பயன்பாட்டில் இருக்கும் வாகனங்களில் அவசரகால பட்டன்களுடன், ஜிபிஎஸ் கருவிகள் கட்டாயம் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த 2012ம் ஆண்டு டெல்லியில் ஓடும் பஸ்சில் கல்லூரி மாணவி ஒருவர் கூட்டு பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு இறந்தார். இதுதொடர்பான வழக்கில் பொதுமக்கள் பயன்படுத்தும், பொதுத்துறை வாகனங்கள், பொது பயன்பாட்டு வாகனங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து அரசு பஸ்களில் கண்காணிப்பு கேமராக்கள், பஸ்களின் இயக்கத்தை கண்காணிக்க ஜிபிஎஸ் கருவிகள், அவசரகால பட்டன்கள் போன்றவை பொருத்தப்படும் என்று மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் உறுதி அளித்தது.

அதன்படி மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அக்டோபர் 31ல் அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி வைத்தது. அதில் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் 2019ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் பதிவாகும் பொதுமக்கள் பயன்படுத்தும் வாகனங்கள், பொது பயன்பாட்டு வாகனங்களில் அவசரகால பட்டன்கள் மற்றும் ஜிபிஎஸ் கருவிகள் கட்டாயம் பொருத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இதுகுறித்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கூறியதாவது: ‘மத்திய அரசின் இந்த உத்தரவால் பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பு கிடைக்கும். தங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும்போது பஸ்களில் பொருத்தப்படும் அவசரகால பட்டன்களை அழுத்தினால் அருகில் உள்ள காவல் நிலையங்களுக்கு தாமாகவே தகவல் சென்று விடும்.

பஸ்சில் உள்ள ஜிபிஎஸ் கருவி உதவியால் பஸ் செல்லும் இடத்தை உடனே அடையாளம் காண முடியும். அத்துடன் பஸ்சில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலம் அங்கு நடக்கும் குற்றங்களையும், குற்றவாளிகளையும், காவல் கட்டுப்பாட்டு அறையில் உள்ள திரையில் நேரடியாக காண முடிவதுடன் நடவடிக்கையும் உடனே மேற்கொள்ள முடியும். அத்துடன் பஸ் வேறு பாதையில் கடத்தப்பட்டாலும் கண்டுபிடிக்க முடியும்’ என்றனர்.

Related Stories: