குடிநீர் குழாய் உடைந்து குண்டும் குழியுமான சாலை

பொள்ளாச்சி, நவ. 14:  பொள்ளாச்சி அருகே சிங்காநல்லூர் கிராமத்துக்கு செல்லும் வழியில் குடிநீர் குழாய் உடைந்து பள்ளமான சாலையால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. பொள்ளாச்சி மீன்கரை ரோடு நஞ்சேகவுண்டன்புதூர் பிரிவில் இருந்து குஞ்சிபாளையம் கிராமம் அருகே உள்ள ரயில்வே கேட்டை கடந்ததும் சிங்கநல்லூர் கிராமத்துக்கு செல்லும் பிரதான ரோடு உள்ளது. இந்த வழியாக குஞ்சிபாளையம் மற்றும் சிங்காநல்லூர், நாயக்கன்பாளையம், கருப்பம்பாளையம் கெட்டிமல்லன்புதூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு போக்குவரத்து தொடர்ந்துள்ளது. மேலும்,  இந்த கிராமங்களில் ஆங்காங்கே மஞ்சி தொழிற்சாலை, பென்சில் தயாரிக்கும் தொழிற்சாலை, பஞ்சி தொழிற்சாலை உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகள் உள்ளன. இதனால், இந்த ரோட்டில் பகல் இரவு என தொடர்ந்து கனரக வாகன போக்குவரத்து உள்ளது. ஆனால், இந்த ரோடு குறுகலாக இருப்பதால் அந்த வழியாக எதிர் எதிர் திசையில் வரும் வாகன ஓட்டிகள் விரைந்து செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.

இந்த நிலையில், குஞ்சிபாளையத்திலிருந்து சிங்காநல்லூர் கிராமத்துக்கு செல்லும் வழியில் உள்ள ரோட்டின் மையப்பகுதியில், சில மாதங்களுக்கு முன்பு குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. ஆனால், இதை சரிசெய்யாமல் கிடப்பில் போடப்பட்டதால் தற்போது அந்த இடத்தில் தாருடன் ஜல்லிகற்கள் பெயர்ந்து, சுமார் ஒரு அடி ஆழத்துக்கு பள்ளமாகியுள்ளது.

மேலும், உடைப்பு ஏற்பட்ட குழாயிலிருந்து வெளியேறும் தண்ணீர் குளம் போல் தேங்கி  உள்ளது. இதனால் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் விரைந்து செல்ல முடியாமல் பள்ளத்தில் சிக்கி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இரவு நேரத்தில் வேகமாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், தண்ணீர்  நிறைந்த பள்ளத்தில் விழுந்து காயமடைந்த சம்பவம் நடந்துள்ளது. வாகன போக்குவரத்து மட்டுமின்றி, கிராமங்களுக்கு செல்லும் இந்த முக்கிய வழித்தடத்தில் மக்கள் நடமாட்டம் இருப்பதால், உடைந்த குடிநீர் குழாயை சரிசெய்து பள்ளமான சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: