சம்பங்கி கிலோ ரூ.140க்கு விற்பனை

சத்தியமங்கலம், நவ.14. வளர்பிறை முகூர்த்த சீசனை முன்னிட்டு, சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் சம்பங்கி பூ கிலோ ரூ.140 க்கு விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 4 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பங்கி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கோயில் திருவிழா, திருமணத்திற்கு தேவையான மாலை மற்றும் மணவறை அலங்காரம் உள்ளிட்டவைகளுக்கு முக்கிய இடம் பிடிக்கும் சம்பங்கி பூ ஓரளவு நல்ல லாபம் தரும் பயிராக உள்ளதால் ,இப்பகுதி விவசாயிகள் இதனை அதிகம் பயிரிடுகின்றனர்.

இங்கு பறிக்கப்படும் பூக்கள் சத்தியமங்கலம் பூமார்க்கெட்டில் ஏலம் விடப்பட்டு கோவை, திருப்பூர்,, ஈரோடு, கொச்சின், திருவனந்தபுரம், பெங்களுரு, ஐதராபாத் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. இந்நிலையில் கடந்த மாதம்  சம்பங்கி பூ விலை கிலோ ஒன்றுக்கு ரூ.15 முதல் அதிகபட்சமாக ரூ.40 வரை மட்டுமே விற்பனையானது. தீபாவளி பண்டிகை முடிந்தபின் தற்போது வளர்பிறை முகூர்த்த சீசன் என்பதால் சம்பங்கி பூ விலை கணிசமாக அதிகரித்துள்ளது.

நேற்றுமுன்தினம் கிலோ ரூ.60 க்கு விற்பனையான நிலையில்  நிலையில் நேற்று கிலோவிற்கு ரூ.80 அதிகரித்து ரூ.140 க்கு விற்பனையானது. சம்பங்கி பூ அதிக விலைக்கு விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

Related Stories: