துப்புரவு பணியாளர்கள் சங்கத்தினர் டிச.11ல் வேலைநிறுத்த போராட்டம்

ஈரோடு,  நவ. 14: தமிழ்நாடு அரசு ஆரம்பசுகாதார நிலைய துப்புரவு பணியாளர்கள்  சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் 11ம்தேதி  வேலைநிறுத்தம் மற்றும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட சங்க ஆலோசனை  கூட்டத்தில் முடிவு செய்துள்ளனர். தமிழ்நாடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய  துப்புரவு பணியாளர்கள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் உள்ள சங்க  அலுவலகத்தில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு பூபாலன் தலைமை தாங்கினார். இதில்  சிறப்பு அழைப்பாளராக சங்கத்தின் மாநில தலைவர் சண்முகம் கலந்து கொண்டு  கோரிக்கைகளை விளக்கி பேசினார். இந்த கூட்டத்தில் அனைத்து தரப்பு அரசு  ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு செய்துள்ள தமிழக அரசு ஆரம்ப சுகாதார  நிலையங்களில் தமிழகம் முழுவதும் 2 ஆயிரத்து 600 துப்புரவு பணியாளர்கள்  பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு ஆயிரத்து 500 ரூபாய் சம்பளம் மட்டுமே  வழங்கப்பட்டு வருகிறது. தினசரி 12 மணி நேரம் பணியாற்றி வரும் இவர்களுக்கு  வார விடுமுறையோ, பண்டிகை விடுமுறையோ வழங்கப்படுவதில்லை.  

அரசு ஆரம்ப  சுகாதார மையங்களில் பணியாற்றி வரும் துப்புரவு பணியாளர்களுக்கு காலமுறை  ஊதியம் வழங்க வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஈரோட்டில் டிசம்பர்  11ம்தேதி உண்ணாவிரத போராட்டம் மற்றும் வேலைநிறுத்த போராட்டம் நடத்துவது,  இந்த போராட்டம் குறித்து அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் பிரச்சார  கூட்டங்களை நடத்துவது என்பன உட்பட பல்வேறு கோரிக்கை தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் தமிழக ஐக்கிய விவசாயிகள் சங்க மாவட்ட  தலைவர் வெங்கடாசலம், செயலாளர் பூபதி, தமிழக ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி மாநகர  செயலாளர் கண்ணன், துப்புரவு பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் பச்சியம்மாள்,  தேன்மொழி, முருகம்மாள், முருகன், டேங்க் ஆபரேட்டர் சங்க தலைவர் திருப்பதி  உட்பட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Related Stories: