கிடப்பில் போடப்பட்ட உதவித்தொகை மனுக்கள்

ஈரோடு, நவ. 14: உதவித்தொகை கேட்டு நலவாரியத்தில் விண்ணப்பிக்கப்பட்ட மனுக்கள் பல ஆண்டுகளாக கிடப்பில் கிடப்பதாக ஏஐடியுசி புகார் தெரிவித்துள்ளது.

 தமிழ்நாடு ஏஐடியுசி கட்டிட தொழிலாளர் சங்கத்தின் பெருந்துறை ஒன்றிய மாநாடு பெருந்துறையில் ஜீவா இல்லத்தில் நேற்று முன்தினம் நடந்தது. இம்மாநாட்டிற்கு ஒன்றிய தலைவர் பாபு தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் குணசேகரன் கொடியேற்றினார். ஏஐடியுசி மாவட்ட தலைவர் சின்னசாமி மாநாட்டை துவக்கி வைத்தார். ஏஐடியுசி மாநிலக்குழு உறுப்பினர் சுந்தரம் சிறப்புரை ஆற்றினார். மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்வருமாறு: கட்டுமான தொழிலாளர்கள் பணியிடங்களில் விபத்துகளில் சிக்கி பாதிக்கப்படும் போது சிகிச்சை செலவு தொகை அல்லது நிவாரணம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரிய அலுவலகத்தில் ஓய்வூதியம், விபத்து மரண இழப்பீடு, இயற்கை மரண உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் கோரி சமர்பிக்கப்பட்ட ஏராளமான கேட்பு மனுக்கள் தீர்வு காணப்படாமல் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளதை கருத்தில் கொண்டு உடனடியாக தீர்வு காண வேண்டும்,

கட்டுமான தொழிலாளர் நல வாரியம் மூலம் வழங்கப்படும் நலத்திட்ட உதவித்தொகைகள் உயர்த்தி வழங்க வேண்டும், தொழிலாளர் குழந்தைகளின் கல்வி செலவு முழுவதையும் வாரியமே ஏற்க வேண்டும். கட்டுமான தொழிலாளர் குடும்பங்களுக்கு இலவச வீடு கட்டித்தர வேண்டும்,  கட்டுமான துறையில் வெளி மாநில தொழிலாளர்கள் வருகையால் உள்ளூர் பெண்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைப்பதில்லை என்பதால் உள்ளூர் தொழிலாளர்களுக்கு 80 சதவீத வேலை வாய்ப்பை உத்தரவாதப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: