சங்கமேஸ்வரர் கோயிலில் 108 சங்காபிஷேக வழிபாடு

பவானி, நவ. 14: கந்த சஷ்டியை முன்னிட்டு பவானி சங்கமேஸ்வரர் கோயிலில் உள்ள வள்ளி தெய்வான உடனமர் ஆறுமுகக் கடவுள் சன்னதியில் 108 சங்காபிஷேகம் மற்றும் சிறப்பு வேள்வி வழிபாடு நடைபெற்றது. இக்கோயிலில் கந்தர் சஷ்டி விழா வழிபாடுகள் கடந்த 7ம் தேதி விநாயகர் வழிபாட்டுடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து நாள்தோறும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை வழிபாடுகள் நடைபெற்று வந்தன. விழாவை முன்னிட்டு நேற்று 108 சங்காபிஷேக வழிபாடுகள் நடத்தப்பட்டன.

மேலும், சிறப்பு ஹோமம் மற்றும் ஆராதனை, அலங்கார வழிபாடுகள் நடத்தப்பட்டன. இதில், தமிழக சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியக்குழு உறுப்பினர் தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, பவானி நகரின் முக்கிய வீதிகள் சந்திக்கும் பகுதிகளில் சூரசம்ஹாரம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு இறைவனை வழிபட்டனர். இன்று காலையில் திருக்கல்யாண உற்சவமும், தொடர்ந்து அன்னதானமும் நடைபெற உள்ளது.

Related Stories: