மிளா வேட்டையாடிய 6 பேர் சிறையிலடைப்பு

அம்பை, நவ. 14:  மணிமுத்தாறு வனப்பகுதியை ஒட்டியுள்ள தனியார் தோட்டத்தில் சிலர், நாய் உதவியுடன் வேட்டையாடுவதாக புலிகள் காப்பக கள இயக்குநர் அன்வர்தீன், துணை இயக்குநர் கொம்மு ஓம்காரம் ஆகியோருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வனச்சரகர்கள் கார்த்திக்கேயன், பாரத், நெல்லை நாயகம், வனவர் முருகேசன், வனக்காப்பாளர் சக்திவேல், வேட்டை தடுப்பு காவலர்கள் உள்ளிட்ட வனத்துறையினர் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது மணிமுத்தாறு 80 அடி கால்வாய்க்கு வடக்கே மூலச்சி சுடுகாட்டு மண்டப பகுதியில் 8 பேர், மிளாவை வெட்டி கூறுபோட்டு கொண்டிருந்தனர். வனத்துறையினரை கண்டதும் அவர்கள் தப்பியோடினர். அங்கு கிடந்த மிளா இறைச்சி, கால், தோல் மற்றும் ஆயுதங்களை கைப்பற்றினர்.

விசாரணையில் தப்பியோடியவர்கள், கல்லிடைக்குறிச்சி மூலச்சி கீழ காலனி கிருஷ்ணன் மகன் கந்தன் (32), பால்ராஜ் மகன் சுரேஷ் (35), பொன்மான் நகர் அன்பழகன் மகன் சுப்பிரமணி என்ற ஸ்டீபன் (30), மலையான்குளம் பழனி மகன் முத்து (33), அருள் (45), காசிமணி (60) மற்றும் பிரபாகரன், மகேஷ் என தெரிய வந்தது. அவர்களை வனத்துறையினர் கைது செய்தனர். முயல் வேட்டைக்கு சென்றபோது தனியார் தோட்டத்தில் கட்டப்பட்டிருந்த நைலான் வேலியில் ச்ிக்கியிருந்த மிளாவை பிடித்து வெட்டி கூறுபோட்டதாக தெரிவித்து உள்ளனர். பிரபாகரன், மகேஷ் ஆகியோர் அபராதம் கட்ட ஒப்புக் கொண்டதையடுத்து இருவருக்கும் தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மற்ற 6 பேரும் அம்பை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related Stories: