கந்தசஷ்டி திருவிழா கோலாகலம் சூரபத்மனை வதம் செய்தார் முருகர்

தென்காசி, நவ. 14: தென்காசி காசிவிசுவநாதர் கோயிலில் உள்ள பாலமுருகன் சன்னதி, ஆனைப்பாலம் தென்பழநி ஆண்டவர் கோயில், மேலகரம் செண்பக விநாயகர் கோயிலில் உள்ள பாலமுருகன் சன்னதி, குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோயில், இலஞ்சி குமாரர் கோயில், கீழப்புலியூர் புனித சுப்பிரமணிய சுவாமி கோயில்களில் கந்த சஷ்டி விழா, 8ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. முக்கிய நிகழ்ச்சியான முருகப்பெருமான் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம், நேற்று மாலை நடந்தது. இதையொட்டி அனைத்து கோயில்களிலும் காலை மற்றும் மதிய வேளையில் சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடந்தது. தென்காசி காசிவிசுவநாத சுவாமி கோயிலில் சூரசம்ஹாரம் முடிந்து இரவில் வாணவேடிக்கைள் நடந்தது. இன்று (14ம் தேதி) குற்றாலம், இலஞ்சி, மேலகரம், தென்காசி தென்பழநி ஆண்டவர் கோயில்களில் இரவில் திருக்கல்யாணம் நடக்கிறது. கீழப்புலியூர் புனித சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று இரவு 7 மணிக்கு திருவிளக்கு பூஜை, 8 மணிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது.

இதேபோல் பிரசித்தி பெற்ற ஆய்க்குடி பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலிலும் கந்தசஷ்டி திருவிழா, 8ம் தேதி காலையில் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தினமும் காலை, மாலையில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் மண்டகப்படிதாரர் தீபாராதனை, பல்வேறு வாகனங்களில் வீதிஉலா, ஆன்மீக சொற்பொழிவு நடந்தது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரத்தை முன்னிட்டு நேற்று காலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. மாலை 5 மணிக்கு சூரபத்மனை வதம் செய்யும் சம்ஹாரம் நடந்தது.

இதில் கோயில் செயல் அலுவலர் அன்புமணி, கண்காணிப்பாளர் ரத்தினவேலு, பேரூராட்சி செயல் அலுவலர் கந்தசாமி, சேனைத்தலைவர் சமுதாய மாநில தலைவர் கிருஷ்ணமூர்த்தி, தொழிலதிபர் சுப்பிரமணியன், டாக்டர் ராஜேஷ், செங்கோட்டை அதிமுக ஒன்றிய செயலாளர் செல்லப்பன், அதிமுக பேரூர் எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் வடிவேல், அமமுக ஒன்றிய இளைஞரணி இணை செயலாளர் பாலமுருகன், நமசிவாயம், பாலசுப்பிரமணியன், காளிராஜ், இளைஞர் காங். தலைவர் கார்வின், கம்பிளி அருணாசலம், நகர காங். தலைவர் மாரியப்பன் உட்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.  விழாவில் இன்று இரவு 10 மணிக்கு சப்தாவர்ணம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் அனைத்து சமுதாய கட்டளைதாரர்கள், திருக்கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Related Stories: