தாழையூத்து நான்குவழிச்சாலையில் மண் திட்டுகளால் விபத்து அபாயம்

தாழையூத்து, நவ.14: சென்னையிலிருந்து நெல்லை வரும் நான்குவழிச்சாலையில் தாழையூத்து பகுதி முக்கியமானதாக உள்ளது. வடமாநிலங்களில் இருந்து கன்னியாகுமரி, கேரளா, குற்றாலம், பாபநாசம், திருச்செந்தூர் மற்றும் பல சுற்றுலாதலங்களுக்கு வரும் பேரூந்துகள், கேரளா மற்றும் தூத்துக்குடிக்கு செல்லும் கனரக வாகனங்கள் என இந்த சாலை எப்போதும் போக்குவரத்து அதிகமானதாக உள்ளது. ஆனால் நான்குவழிச்சாலை முறையான பராமரிப்பின்றி அடிக்கடி விபத்து ஏற்படும் பகுதியாக உள்ளது. கயத்தாறு சுங்கச்சாவடியிலிருந்து தாழையூத்து வரையிலான 20கிமீ தூரசாலை போக்குவரத்திற்கு பெரும் சவாலாக உள்ளது. இந்த பகுதியில் ஏராளமான விபத்துகளும் உயிர்பலிகளும் தொடர்ந்த வண்ணம் உள்ளது. இந்த விபத்துகளுக்கு நெடுஞ்சாலைத்துறை ஆணையமே காரணம் என்று பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். அதிலும் கங்கைகொண்டானை அடுத்து பாப்பான்குளம் விலக்கிலிருந்து தாதனூத்து வரையில் நான்குவழிச்சாலையின் இரண்டு புறங்களிலும் மண் திட்டுகள் குவிந்து காணப்படுகிறது. இதனால் அப்பகுதியினை கடந்து செல்லும் இருசக்கர வாகனங்கள், கார்கள் மண் குவியல் மீது செல்லாமல் தவிர்க்க சாலையின் நடுப்பகுதிக்கு திடீரென செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.

சாலை பராமரிப்பிற்கென்று பலகோடிகளை வசூலிக்கும் தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் சாலைகளை சீரமைப்பதில்லை. அதிலும் கயத்தாறு சுங்கச்சாவடிக்குட்பட்ட சாலையில் பராமரிப்பு பணி கேள்விகுறியாகியுள்ளது. விபத்து ஏற்பட்ட பின்பு, சம்பவ இடத்திற்கு வந்து ஆராயும் நெடுஞ்சாலைத்துறையினர் விபத்து நடப்பதை தடுக்க எந்தவிதமான நடவடிக்கையும் எடுப்பதில்லை. இந்த மாதத்தில் பண்டாரகுளம் அருகே லாரியில் அடிபட்டு முதியவர் பலியானது, நின்ற லாரி மீது அரசு பஸ் மோதி 4பேர் உயிரிழப்பு, 35பேர் காயம், கங்கைகொண்டானில் சாலையின் வழுக்கும் தன்மையால் அடுத்தடுத்து நான்கு வாகனங்கள் மோதி பலர் காயம், நேற்று முன்தினம் 3வாகனங்கள் மோதல், கலைஞர் காலனி அருகில் பைக்குகள் மோதலில் ஆபத்தான் நிலையில் 3பேர் சிகிச்சை என 15நாட்களில் மட்டும் ஏராளமான விபத்துகள் நடந்துள்ளது. விபத்துகள் பல நடந்தும் பாராமுகத்துடன் உள்ள நெடுஞ்சாலைத்துறையின் மீது மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதும், கங்கைகொண்டான் வழுக்கும் சாலை மற்றும் பாப்பான்குளம் விலக்கு அருகில் உள்ள சாலையோர மண் திட்டுகளை விரைவில் சரிசெய்திட தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

Related Stories: