நெல்லை அருகே லாரி மீது அரசு பஸ் மோதல்: பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு

நெல்லை, நவ. 14: நெல்லை அருகே லாரி மீது அரசு பஸ் மோதிய விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 4 ஆனது.

கோவையில் இருந்து நாகர்கோவிலுக்கு கடந்த 31ம் தேதி இரவு 8.30 மணிக்கு அரசு பஸ் புறப்பட்டு வந்தது. பஸ்சை குமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே உள்ள மகராஜபுரத்தைச் சேர்ந்த முரளிதரன் (41) என்பவர் ஓட்டி வந்தார். பஸ்சில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். அதிகாலை 4 மணியளவில் நெல்லையை அடுத்த தாழையூத்து பண்டாரகுளம் அருகே பஸ் வந்தபோது, நான்கு வழிச்சாலையில் நின்ற லாரி மீது எதிர்பாராதவிதமாக பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி மாதா கோயில் தெருவைச் சேர்ந்த சுப்பையா (55), அவரது மகள் சுகன்யா (22), கோவை சூலூர் சுல்தான்பேட்டையைச் சேர்ந்த ரமேஷ்குமார் (42) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். பஸ் டிரைவர் முரளிதரன், கண்டக்டர் குமரன் உள்ளிட்ட 35 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து தொடர்பாக தாழையூத்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கன்னியாகுமரி அருகே உள்ள பண்டாரவிளையைச் சேர்ந்த முருகன் மகன் ராபின் (18) என்பவர் நேற்று முன்தினம் இறந்தார். இதையடுத்து விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

Related Stories: