2019 நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 50 வயதை கடந்தவர்களுக்கு தேர்தல் பணி தரக்கூடாது கலெக்டரிடம் ஆசிரியர்கள் வலியுறுத்தல்

நெல்லை, நவ. 14:  தமிழ்நாடு ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கலெக்டரிடம் அளித்த மனு: தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி நெல்லை கிளை மாவட்ட தலைவர் ராஜ்குமார், செயலாளர் பால்ராஜ் மற்றும் பொருளாளர் பால்ராஜ் ஆகியோர் நெல்லை கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: வரும் 2019ம் ஆண்டு மே மாதம் நாடாளுமன்ற பொது தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் இப்பணியில் 1 லட்சத்து 97 ஆயிரம் பெண்கள் உள்பட 3 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். நெல்லை மாவட்டத்தில் கடந்த காலங்களில் மொத்தம் 2 ஆயிரத்து 931 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு வாக்கு சாவடியில் 8 வாக்குப்பதிவு மைய அலுவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

நெல்லை மாவட்டத்தில் கடந்த காலங்களில் 704 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. எனவே அத்தகையை வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும். கடந்த 2016 சட்ட மன்ற தேர்தலின்போது தேர்தல் பணியில் ஈடுபட்ட இரண்டு ஆசிரியர்கள் வாக்குச்சாவடிக்கு உள்ளேயே மரணம் அடைந்தனர். எனவே தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் உடல் நலனை கருத்தில் கொண்டு மண்டல அளவில் நடமாடும் மருத்துவ குழு அமைத்து அனைத்து மருத்துவ வசதிகளையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். உடல்நலம் பாதிக்கப்பட்டோர் மற்றும் 50 வயதை தாண்டிய ஊழியர்களுக்கு தேர்தல் பணியில் இருந்து விலக்கு அளிக்க  வேண்டும். தேர்தல் பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு தற்போது உள்ள விலைவாசி உயர்வை கணக்கில் கொண்டு அவர்கள் பெறும் ஊதியத்தில் 10 சதவீதம் மதிப்பூதியம் வழங்க  நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.

Related Stories: