ஏய்.. பாம்பு வருது.. பாம்பு வருது.. ஓடு ஓடு.. அலறும் கல்சா மகால் ஊழியர்கள்

சென்னை: நூற்றாண்டு கட்டிடங்களை பராமரிப்பதில் பொதுப்பணித்துறை அலட்சியத்தால் கல்சா மகால் பாம்புகளின் புகலிடமாக மாறி உள்ளது. இதனால், ஊழியர்கள் அச்சத்துடனே பணியாற்றும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.  சேப்பாக்கம் எழிலக வளாகத்தில் உள்ள நூற்றாண்டு பழமையான கல்சா மகால், கடந்த 2012ல் நடந்த தீ விபத்தில் கடுமையாக சேதமடைந்தது. இதையடுத்து, கல்சா மகாலில் இயங்கி வந்த பல்வேறு அரசு அலுவலகங்கள் மாற்றப்பட்டன. இதை தொடர்ந்து கல்சா மகால் 14 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டு கடந்தாண்டு திறந்து வைக்கப்பட்டது. இந்த கட்டிடத்தின் தரை தளத்தில் பசுமை தீர்ப்பாயம் செயல்பட்டு வருகிறது. முதல் தளத்தில் விசாரணை ஆணையம், மகளிர் ஆணையம், மணல் குவாரிகள் செயல்பாடுகளின் திட்ட இயக்குனர் அலுவலகம், புராதன கட்டிட பாதுகாப்பு அலுவலகம், சமூக நல வாரியம் உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகள் செயல்படுகின்றன.

கல்சா மகால் கட்டிட வளாகத்தில் கடந்த சில நாட்களாக பாம்புகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக, நேற்று முன்தினம் கல்சா மகால் அலுவலக தரைதளத்தில் 5 அடி நீள பாம்பு ஒன்று வந்தது. இதை பார்த்து பதறி போன ஊழியர்கள் உடனடியாக அலுவலகத்தை விட்டு வெளியேறினார்கள். இதை தொடர்ந்து வனத்துறைக்கு ஊழியர்கள் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அங்கு வந்த வனத்துறை அதிகாரிகள் பாம்பை பிடித்து சென்றனர். இந்நிலையில், கல்சா மகால் வளாகத்தில் ஆங்காங்கே பாம்புகள் சுற்றி வருவதாக ஊழியர்கள் சிலர் புகார் தெரிவித்தனர். மேலும், ஊழியர்கள் பணிகளில் கவனம் செலுத்த முடியாமல், பாம்பு வருகிறதா என கண்காணிக்க வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஊழியர்கள் அச்சத்தை போக்க கல்சா மகால் வளாகத்தை சுற்றி பாம்புகள் வராமல் இருக்க மருந்து தெளிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இதுகுறித்து அரசு ஊழியர்கள் சிலர் கூறுகையில், ‘‘ஹூமாயூன் மகாலில் கடந்த 2013ல் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது. இதை தொடர்ந்து அந்த கட்டிடத்தில் இயங்கி வந்த அரசு அலுவலகங்கள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டன. தொடர்ந்து அந்த கட்டிடங்களை சீரமைக்க அரசு சார்பில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது, அந்த கட்டிடம் பாழடைந்த நிலையில் உள்ளதால், அதில் விஷ ஜந்துகளின் புகலிடமாக மாறி விட்டது. அந்த கட்டிடத்தில் இருந்துதான் கல்சா மகால் கட்டித்திற்கு பாம்புகள் வருகிறது. பாம்புகள் நடமாட்டத்தால் ஊழியர்கள் பலர் பயந்து போய் உள்ளனர். இதுதொடர்பாக பொதுப்பணித்துறைக்கு புகார் அளிக்கப்பட்டு விட்டது. பொதுப்பணித்துறை சார்பில் ஹூமாயூன் மகாலில் உள்ள பாம்புகளை பிடிக்க விரைந்து நடவடிக்கை  எடுக்க வேண்டும். குறிப்பாக, உயிர் சேதம் எதுவும் ஏற்படுவதற்கு முன்னரே  நடவடிக்கை எடுக்கவில்லை எனில் பெரும் பிரச்னையை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும்’’ என்றனர்.

Related Stories: