கஜா புயலால் பாதிப்புகள் ஏற்பட்டால் பொதுமக்களை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது

மரக்காணம், நவ. 14: வங்கக் கடலில் தற்போது கஜா புயல் உருவாகி உள்ளது. இந்த புயல் கடலூர் மற்றும் பாம்பன் பகுதியில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த புயலின் தாக்கம் விழுப்புரம் மாவட்ட கடலோரப் பகுதியிலும் இருக்கும் என கூறப்படுகிறது.

இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இவர்கள் தங்களது பைபர் படகு மற்றும் வலைகள் உள்ளிட்ட மீன் பிடி உபகரணங்களை பாதுகாப்பான இடத்தில் வைத்துள்ளனர். இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சுப்ரமணியன், மரக்காணம் அருகே உள்ள அழகன்குப்பம், செட்டிநகர் மீனவர் பகுதி, பெரிய முதலியார் சாவடி ஆகிய பகுதிகளில் உள்ள புயல் பாதுகாப்பு மையம் மற்றும் அப்பகுதி மீனவர்களை நேரில் சென்று பார்வையிட்டார்.இதனைத் தொடர்ந்து செட்டிநகர் மீனவர் பகுதியில் தயார் நிலையில் இருக்கும் பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினர் வைத்திருந்த பாதுகாப்பு உபகரணங்களை பார்வையிட்டு அவர்களுக்கு மீட்பு பணிகள் குறித்த ஆலோசனைகள் வழங்கினார்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் சுப்ரமணியன் கூறுகையில், விழுப்புரம் மாவட்டத்தில் 19 மீனவர் கிராமங்கள் உள்ளது. இந்த பகுதியில் கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒவ்வொரு 5 மீனவர் பகுதிக்கும் ஒரு துணை ஆட்சியர் தலைமையில் அதிகாரிகள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இது போல் பேரிடர் மீட்பு குழுவினருடன் அனைத்து கிராமங்களிலும் அப்பகுதியில் உள்ள 20 சிறப்பு பயிற்சி பெற்ற இளைஞர்கள் உள்ளனர். இவர்கள் புயல் மற்றும் மழையால் பாதிப்புகள் உண்டானால் அதிகாரிகள் வருவதற்குள்  உடனடியாக மீட்பு பணிகளில் ஈடுபடுவார்கள். இது போல் மாவட்டத்தில் தாழ்வான பகுதியில் வெள்ளத்தில் சிக்கிக் கொள்பவர்களை மீட்க பைபர் படகுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டால் அப்பகுதிக்கு மின்சாரம் வழங்க ஜெனரேட்டர்களும் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க இப்போதே அனைத்து கிராமங்களிலும் உள்ள குடி நீர் தொட்டிகளில் குடிநீர் நிரப்பப்பட்டுள்ளது. இப்பகுதியில் இயற்கை சீற்றத்தால் பாதிப்புகள் ஏற்பட்டால் பொது மக்களை மட்டும் அல்ல. கால் நடைகளையும் பத்திரமாக பாதுகாக்க, அதற்கும் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். புயல், கன மழையால் பாதிப்புகள் ஏற்பட்டால் உடனடியாக பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்க விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது. இயற்கை பேரிடரால் பாதிப்புகள் ஏற்பட்டால் பொது மக்கள் இந்த எண்ணில் 1077, வாட்ஸ் அப் எண் 8778582464 தொடர்புகொள்ளலாம் என்றார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, மரக்காணம் வட்டாட்சியர் தனலட்சுமி, மண்டல துணை வட்டாட்சியர் ஏழுமலை, பேரூராட்சி செயல் அலுவலர் ராஜீ, வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகாமி மற்றும் மீன் வளத்துறை, வருவாய் துறை, தீ அணைப்பு துறை, கால்நடை துறை உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Related Stories: