உளுந்தூர்பேட்டை டோல்கேட்டில் வாகன தணிக்கை செய்வதால் ஓட்டுனர்கள் கடும் அச்சம்

உளுந்தூர்பேட்டை, நவ. 14:  உளுந்தூர்பேட்டை அடுத்த செங்குறிச்சி டோல்கேட் பகுதியின் வழியாக தினந்தோறும் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஆயிரக்கணக்கான பேருந்துகள், கனரக வாகனங்கள், கார் உள்ளிட்டவை சென்று வருகிறது. இதில் டோல்கேட்டில் இருந்து உளுந்தூர்பேட்டை செல்லும் பிரிவு சாலை பகுதியில் தினந்தோறும் ஏராளமான விபத்துகள் ஏற்பட்டு பலர் உயிரிழந்தும், ஏராளமானவர்கள் படுகாயம் அடைந்து வருகின்றனர். அதிக விபத்து பகுதியாக உள்ள டோல்கேட் அருகில் அடிக்கடி நடைபெறும் வாகன விபத்துகளை தடுக்க காவல்துறை சார்பில் பேரிகார்டுகள் அதிகளவு போடப்பட்டு உள்ளது. இந்த பேரிகார்டு வைக்கப்பட்டுள்ள இடத்தில் வாகனங்கள் குறைந்த வேகத்தில் செல்ல வேண்டும் என்ற நோக்கில் போடப்பட்டுள்ள நிலையில் இதனை பயன்படுத்தி வாகன தணிக்கை என மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மற்றும் வாகன தணிக்கை அதிகாரிகள் தினந்தோறும் டோல்கேட் பகுதியில் ஓட்டல்கள் அருகில் வாகனங்களை நிறுத்தி தணிக்கை செய்து வாகன ஓட்டுனர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் வசூல் செய்யப்பட்டு வருகிறது.

அதிக விபத்துகள் நடைபெறும் இந்த பகுதியில் மோட்டார் வாகன அதிகாரிகள் வாகனங்களை மறித்து சோதனை செய்வதால் ஏராளமான கனரக வாகனங்கள் அணிவகுத்து சாலையின் ஓரம் நிற்பதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இது மட்டுமின்றி வாகனங்கள் மோதிக்கொண்டு விபத்துகள் ஏற்படும் நிலையும் உள்ளது. இதனால் வாகன ஓட்டுனர்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வாகன தணிக்கையினை தேசிய நெடுஞ்சாலை மற்றும் அதிக விபத்து நடைபெறும் இடத்தில் நடத்தாமல் தனியாக வாகனங்கள் நிறுத்தப்படும் இடத்தில் வைத்து தணிக்கையில் ஈடுபட்டால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படாது, தேவையற்ற வாகன விபத்துகளும் ஏற்படாது என வாகன ஓட்டுனர்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: