×

கட்டி முடிக்கப்பட்டும் திறக்கப்படாத தொட்டி குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

விழுப்புரம், நவ. 14: அரகண்டநல்லூரில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதாகவும், ரூ.25 லட்சத்தில் கட்டப்பட்ட மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டி பல ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருப்பதாகவும், உடனடியாக திறக்க ேவண்டும் என பொதுமக்கள் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் பேரூராட்சி 6, 7வது வார்டை சேர்ந்த பொதுமக்கள் விழுப்புரம் ஆட்சியர் சுப்ரமணியனிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: அரகண்டநல்லூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 6, 7வது வார்டு ஆசிரியர் நகரில் சுமார் 150 குடும்பங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு தென்பெண்ணை ஆற்றில் இருந்து நேரடியாக குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.இதனால் போதிய அளவு குடிநீர் கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்பட்டு வந்தது. தொற்று நோய் ஏற்படுத்தும் அளவிற்கு பாதுகாப்பில்லாத குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.

இதையடுத்து 6வது வார்டு மற்றும் அருகே உள்ள 7வது வார்டு பொதுமக்களுக்கும் சேர்ந்து பாதுகாப்பான மற்றும் தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்கவும் பேரூராட்சி அதிகாரிகள் முடிவு செய்து 2013-14ம் நிதியாண்டில் அப்போதைய தமிழக முதல்வரால் இடைவெளி நிரவல் திட்டத்தின் கீழ் ஆசிரியர் நகரில் 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்க ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி இதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு பணிகளும் முடிவடைந்தது. 3 ஆண்டுகள் ஆகியும் இன்னும் இந்த மேல்நிலை நீர்தேக்க தொட்டி இரண்டு வார்டுகளில் வசிக்கும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்படவில்லை. ஆனால் மேல்நிலை நீர்தேக்க தொட்டியை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்ததை போல் அங்கு பெயர் பலகை அமைத்துள்ளனர். இப்பகுதியை சேர்ந்த நாங்கள் சம்பந்தப்பட்ட பேரூராட்சி அதிகாரிகளுக்கு பலமுறை நேரடியாக புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் மேல்நிலை நீர் தேக்க தொட்டியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை. இதனால் மக்களின் வரிப்பணம் ரூ.25 லட்சம் அதிகாரிகள் அலட்சியத்தால் வீணடிக்கப்படுவதுடன் எங்கள் பகுதி மக்களுக்கு தற்போது பாதுகாப்பில்லாத தட்டுப்பாடுடன் கூடிய குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

இதனால் எங்கள் பகுதியில் வசிப்பவர்கள் பல நேரங்களில் குடிநீர் தட்டுப்பாட்டால் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைந்துள்ள பகுதியில் பல லட்சம் செலவில் வடிகால் மற்றும் தார்சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் துவங்கப்பட்டு வருகிறது. இந்த தார்சாலை மற்றும் வடிகால் பணிகள் முடிக்கப்பட்ட பிறகு மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு செல்லும் குடிநீர் குழாய்களை சீரமைத்தால் தார்சாலையும், வடிகாலும் சேதமடையும். எனவே ஆட்சியர் நடவடிக்கை எடுத்து தார்சாலை, வடிகால் அமைப்பதற்கு முன்பே மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் குடிநீர் ஏற்றி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.

Tags : completion ,
× RELATED ஊர்க்காவல் படை பயிற்சி நிறைவு விழா