பிப்டிக் வராக்கடன் 106 கோடியை வசூலிக்க அரசுக்கு கோரிக்கை

புதுச்சேரி, நவ. 14: புதுச்சேரியில் தொழில் வளர்ச்சிக்காக புதுவை தொழில் மேம்பாட்டு நிறுவனம் (பிப்டிக்) பல்வேறு வகைகளில் கடன் அளித்து வருகிறது. ஆனால் இந்நிறுவனத்தின் வராக்கடன் மட்டும் மொத்தம் ரூ.106 கோடியே 82 லட்சத்து 658 உள்ளது. இதில் சிறுதொழில் கடன் ரூ.1.87 கோடி, வாகன கடன் ரூ.6.40 கோடி, கல்விக்கடன் ரூ.1.32 கோடி, அரசு சார்ந்த தொழிற்சாலைகள் கடன் ரூ.97.20 கோடியாகும். குறிப்பாக அரசு சார்ந்த நிறுவனங்களான கூட்டுறவு சர்க்கரை ஆலை ரூ.21.94 கோடியும், புதுவை பஞ்சாலை கழகம் ரூ.54.30 கோடியும், ஜெயப்பிரகாஷ் நாராயணன் நூற்பாலை ரூ.15.65 கோடியும் நிலுவை தொகை வைத்துள்ளனர். கடந்த மார்ச் 3ம் தேதி வரை அசல், வட்டி சேர்த்து இத்தொகையாகும்.

ராஜீவ்காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பின் ரகுபதி, இந்திய தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் இத்தகவலை கேட்டுப் பெற்றுள்ளார். அவர் மேலும் கூறுகையில், தற்போது புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு நிறுவனங்களும் நஷ்டத்தில் இயங்கி, ஊழியர்களுக்கு ஊதியமே அளிக்க முடியாத நிலையில் இதுபோன்ற அரசு நிறுவன தொழிற்சாலைகளுக்கு பல கோடி கடனாக வழங்கும்பட்சத்தில் லாபத்தில் இயங்கி வரும் பிப்டிக் நிறுவனமும் நஷ்டத்தில் இயங்கும் சூழ்நிலை ஏற்படும்.

மேலும், கடனாக பெறப்பட்ட ரூபாயை இவர்கள் ஆலையின் வளர்ச்சிக்கு பயன்படுத்தாமல் ஊழியர்களுக்கு ஊதியம் அளிகத்தான் பயன்படுத்தியுள்ளனர் என தெரியவருகிறது. அரசின் இதுபோன்ற தவறான நடவடிக்கைகளால் தான் அனைத்து அரசு நிறுவனங்களும் நஷ்டத்தில் இயங்குகின்றன.

எனவே, தற்போது புதுச்சேரி அரசு கடும் நிதி நெருக்கடி உள்ளதை கருத்தில் கொண்டு கலால் வரி, சொத்து வரி, மின்கட்டண பாக்கி ஆகியவற்றை செலுத்த வேண்டிய நிலுவைதாரர்கள் மீது நடவடிக்கை எடுத்து வசூலித்து வருவதுபோல் பிப்டிக் வராக்கடனையும் வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Related Stories: