×

தேவையான இடங்களில் குப்பை தொட்டி வைக்காமல் தடை உத்தரவு பிறப்பிப்பதா?

புதுச்சேரி, நவ. 14: புதுச்சேரி அதிமுக சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் அளித்த பேட்டி: சுகாதாரம் சம்பந்தப்பட்ட பல விஷயங்களில் மக்களுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை செய்து தர வேண்டியது அரசின் கடமை. புதுச்சேரி நகர பகுதிகளில் குப்பை அள்ளும் பணியை தனியார் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இதற்காக அந்த நிறுவனத்துக்கு ஆண்டுக்கு ரூ.30 கோடி அரசு வழங்குகிறது. ஆனால் டெண்டர் எடுத்த அந்த நிறுவனம் ஒப்பந்தத்தில் உள்ளபடி பணிகளை செய்வதில்லை. குப்பை வாருவதில் மிகப்பெரிய ஊழல், முறைகேடு நடக்கிறது. தேவையான இடங்களில் குப்பை தொட்டி வைக்காததால் மக்கள் கழிவுநீர் வாய்க்காலை குப்பை தொட்டியாக பயன்படுத்தி வருகின்றனர்.
 
இந்த நிலையில் ரோட்டில் குப்பை கொட்ட கவர்னர் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார். சம்மந்தப்பட்ட பொதுமக்கள் மீது வழக்கு பதிவு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஜாமீனில் வெளிவராத பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யும்போது, ஒரு மாதம் வரை சிறையில் இருக்க வேண்டி வரும் அல்லது அபராதம் விதிக்கப்படும்.  தேவையான இடங்களில் குப்பை தொட்டி வைக்காத நிலையில் மக்களை அச்சுறுத்தும் இந்த உத்தரவில், முதல்வர் நாராயணசாமிக்கும் உடன்பாடு உள்ளதா? 2013 முதல் ஏஎப்டி மில்லில் 1100 தொழிலாளர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். அவர்களுக்கு பணிக்கொடை வழங்கப்படவில்லை.

இதில் 95 பேர் இறந்து விட்டனர். நீதிமன்றத்துக்கு சென்ற 27 பேருக்கு மட்டும் ரூ.1.35 கோடி பணிக்கொடை வழங்கப்பட்டுள்ளது. எனவே, அனைத்து தொழிலாளர்களுக்கும் பணிக்கொடை வழங்க வேண்டும். 3 மாதம் வழங்கப்படாத லே-ஆப் சம்பளத்தையும் வழங்க வேண்டும்.  இவ்வாறு அவர்
கூறினார்.

Tags : places ,
× RELATED கொடைக்கானலில் குடியிருப்புக்குள் புகுந்தது காட்டு மாடுகள்