பழி ஓரிடம், பாவம் ஓரிடமா? மக்களுக்கு சேர வேண்டிய சலுகைகளை புதுச்சேரி அரசு நிச்சயம் அளிக்கும்

புதுச்சேரி,  நவ. 14: புதுவையில் தீபாவளியையொட்டி அனைத்து அரசு, சார்பு நிறுவன  ஊழியர்களுக்கும் போனஸ் மற்றும் காலத்தோடு ஊதியம் வழங்க முடியாத நிலை  ஏற்பட்டது. இதற்கு கவர்னர் கிரண்பேடிதான் காரணம் என்று காங்கிரஸ் கடுமையாக  சாடியுள்ளது.  இதுதொடர்பாக புதுச்சேரி முதல்வரின் பாராளுமன்ற செயலரான லட்சுமிநாராயணன் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கை:   அரசு நிறுவனங்களுக்கு மானியம் அல்லது கொடை வழங்குவது தொடர்பான நிதி அனுமதி  விதி 20 கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வருகிறது. ஏதோ இந்த வருடம்  மட்டும் புதிதாக வந்தது அல்ல. கவர்னர் கிரண்பேடி தன் செய்தியில் கூறுவது  போன்று இந்த சட்ட விதிமுறைகள் இன்றோ, நேற்றோ வந்தல்ல. தற்போது உள்ள நிதி  செயலர்தான் கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாகவும் உள்ளார்.  கடந்த ஆட்சி  காலத்தில் இப்படி செய்யாதவர்களும் யாரும் இல்லை. நிதி துறை அதிகாரிகள்  எவரும் வேறு கிரகத்தில் இருந்து திடீரென தற்போது வரவில்லை. மத்திய அரசும்,  மாநில அரசும் நிதி அனுமதி மற்றும் நிதி சம்மந்தமான சட்டங்களை மாற்றாத  நிலையில் இதுவரை பல்வேறு புதுச்சேரி மாநில முதல்வர்களால் ஒப்புதல்  வழங்கப்பட்டு வந்த, இந்த மானியம் அளிப்பு, சம்பளம் உட்பட தரப்பட வேண்டிய  விதிமுறைகள் எதனையும் மாற்றாமல், கவர்னர் கிரண்பேடி அதிகார கர்வத்தில்,  அதிகாரம் தனக்கு மட்டுமே இருக்க வேண்டும் என்று செயல்படுகிறார்.

  மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களும், அமைச்சர்களுக்கும்  இருக்கக்கூடாது என்று இவ்வாறு செயல்படுவது மத்தியில் ஆளும் பாஜக அரசின்  முடிவா அல்லது கிரண்பேடியின் தன்னிச்சையான முடிவா? என்று தெரிவிக்க  வேண்டும். மேலும் அவ்வாறு கடந்த காலத்தில் கவர்னர் உத்திரவின்றி கொடை,  மானியம் கொடுக்க அனுமதி அளித்த அதிகாரிகள் மீது சட்டத்தை மீறியதற்காக  கிரண்பேடி இப்போது நடவடிக்கை எடுப்பாரா?. கடந்த கால இதே நடைமுறைகளை  அனுமதிக்க மறுப்பது கவர்னர் கிரண்பேடிக்கு நியாயமாக தெரிகிறது? இந்த நிதி  அனுமதி விதிகள் தொடர்பாக இதற்கு முன்பு இருந்த கவர்னர்களுக்கு தெரியாதா?  அல்லது முன் இருந்த கவர்னர்களுக்கு புதுச்சேரியில் இருந்த அதிகாரிகளும்,  தற்போதைய அதிகாரிகளும் சொல்லவில்லையா?. நிதி அனுமதி வரலாற்றை  பாருங்கள். மக்களுக்கான செலவினங்களை மக்களால்  தேர்ந்ததெடுக்கப்பட்டவர்கள்தான் முடிவு செய்யவேண்டும் என்ற அடிப்படை ஜனநாயக  அரசியல் சிந்தனையான உயர்ந்த அரசியலமைப்பு எண்ணத்தை, பெரும்பான்மை மக்களின்  ஆட்சிக்கு விரோதமாக தடுப்பதும், தர மறுப்பதும் அதிகார போதையில்லையா.

   மக்களுக்கான அரசு தான் இருக்க வேண்டும் தவிர தனிப்பட்ட விருப்பு வெறுப்பு  விதிகளுக்காக மக்களும், ஊழியர்களும் இல்லை என்பதை ஏன் கவர்னர் புரிந்து  கொள்ள மறுக்கிறார். இதே நிதி செயலர் கடந்த ஆட்சியில் கவர்னர்களுக்கு கோப்பை  அனுப்பாமல் மானியத்திற்கு கோடிக்கணக்கான ரூபாய் செலவு ஒப்புதல்கள் ஆயிரம்  தடவைக்கு மேலும் கொடுத்துள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். இதனை ஆர்.டி.ஐ.யில் யார் வேண்டுமானாலும் கேட்டு பார்க்கலாம். சிஏஜி  ரிப்போர்ட்டில் இதுசம்மந்தமாக பல விஷயம் குறிப்பிடப்பட்டுள்ளது. மக்களின்  சௌகரியத்துக்குத்தான் விதி. விதிக்காக மக்கள் இல்லை. விதியிலும் கோளாறு  இல்லை. விரோத துரோக கண்ணோட்டம்தான் மாற வேண்டும். இதே விதிதான்  டெல்லியிலும் உள்ளது. டெல்லியில் கவர்னர்களுக்கு கோப்பு  அனுப்படுவதில்லையே. மக்கள் நலன் சார்ந்த சிந்தனையோடு ஒருவர் படித்தால்தான்  தெரியும். மக்களிடம் தோற்ற ஒரு நபரால் தன் மக்களை விரோதமாக பார்க்கவும்,  பழி தீர்க்கவும்தான் இப்படி செயல்பட முடியும். புதுச்சேரியில் அரசு  நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மானியம். திட்டத்செலவு மூலம்  அளிக்கப்படுகிறது.

அனைத்து திட்டங்களும் திட்டக்குழுவின் ஒப்புதல்  பெறப்பட்டவைகள். மேலும் இந்த மாநிலத்தின் நிதி ஒதுக்க மசோதா மூலம் சட்ட  மன்றத்தில் சட்டமாக்கப்பட்டவை. இந்த திட்டங்கள் அனைத்தும் மத்திய அரசின்  ஒப்புதல் பெறப்பட்டவை. சட்டமன்ற ஒப்புதல் கொடுக்கப்பட்ட பிறகு, பொதுத்துறை  மற்றும் கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு கொடுக்க வேண்டிய இந்த மானியத்திற்கு,  ஒப்புதல் அளித்த பின்பும், இதனை கவர்னர் தடுப்பது மிகப்பெரிய கிரிமினல்  குற்றமாகும். அதற்கான தண்டனையை அவர் அனுபவித்தே ஆகவேண்டும். புதுச்சேரியின் அனைத்து அதிகாரிகளும் பல ஆண்டுகள் இங்கு வேலை  செய்பவர்கள்தான். விதவிதமான அலங்கார பெயர்களுடன் தினமும் கூட்டம் நடத்தும்  கவர்னர் வெறும் தேநீர் விருந்து கொடுத்து, கடந்த ஆண்டுகளின் மானியம்  ஒப்புதல் விவரங்களை கேட்டு முதலமைச்சரின் அதிகாரத்தில் திட்டங்களில் தடை  ஏற்படுத்தாமல் மக்களின், ஊழியர்களின் வயிற்றில் அடிக்க வேண்டாம்.

  பதினைந்தாயிரம் அரசுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு கவர்னரின் அடாவடித்  தனத்தால் மக்களால் தேர்ந்ததெடுக்கப்பட்டவர்கள் பதில் சொல்லும் நிலையில்  உள்ளார்கள். பழி ஓரிடம், பாவம் ஓரிடமா?  அரசு ஊழியர்கள் அனைவரும்  சந்தோஷமாக தீபாவளி கொண்டாட வேண்டிய நல்ல நாளில் கவர்னரின் குரூர  எண்ணத்தினால் பல ஆயிரம் அரசு பொதுத்துறை ஊழியர்கள் பட்டினியோடும்,  விரக்தியாகவும் குழந்தை குட்டிகளுடன் தீபாவளியை கொண்டாட முடியாத நிலையை  ஏற்படுத்திய கவர்னர் சமூகத்தின் முன் நிற்கும் ஓர் குற்றவாளியே.  மனிதாபிமானமில்லாத, கருணையில்லாத, அதிகார வர்க்கம் மனோநிலை போன்ற  அவப்பெயர்களோடு வாழ்வது என்பதெல்லாம் ஒரு வாழ்க்கையா?. அதற்கு துணை போகும்  சில உயர் அதிகாரிகளும் அதே குற்றத்திற்கும், சாமான்ய ஊழியர்களின் குடும்ப  சாபத்தையே இந்த நல்லநாளில் பெற்றார்கள் என்பதை உறுதியாக கூறுகிறேன்.

  இந்நிலை சில மாதங்களில் மாறும். அப்போது இம்மாநில மக்களுக்கு நம்பிக்கையை  கொடுக்கும் விதமாக மக்கள் நலன் காக்கும் காங்கிரஸ் அரசு யாருடைய  வயிற்றிலும் அடிக்காமல் நியாயமாக சேர வேண்டிய சலுகைகளை அனைவருக்கும்  நிச்சயம் அளிக்கும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories: