×

சங்கரதாஸ் சுவாமிகள் நினைவஞ்சலி புதுவையில் நாடக பள்ளி

புதுச்சேரி, நவ. 14:  புதுச்சேரி மாநில கலை இலக்கிய பெருமன்றம் சார்பில் நாடக தந்தை சங்கரதாஸ் சுவாமிகளின் 96ம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதையொட்டி, தென்னிந்திய நடிகர் சங்கத்தினர், நாடக கலைஞர்கள், தெருக்கூத்து கலைஞர்கள் தமிழிசை முழங்க வேதபுரீஸ்வரர் கோயிலில் இருந்து கருவடிக்குப்பம் மயானத்தில் உள்ள சங்கரதாஸ் சுவாமிகள் நினைவிடம் வரை ஊர்வலம் வந்தனர். அங்கு, சங்கரதாஸ் சுவாமிகள் சிலைக்கு அமைச்சர் ஷாஜகான் உள்ளிட்டோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.  அதைத் தொடர்ந்து, சங்கரதாஸ் சுவாமிகள் நினைவஞ்சலி நிகழ்ச்சி நடந்தது. கலை இலக்கிய பெருமன்ற சிறப்பு தலைவர் ராமன் தலைமை தாங்கினார். பொருளாளர் சுப்பையா, செயலாளர் முனுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிபிஐ தொகுதி செயலாளர் துரை.செல்வம் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்க நிர்வாகிகள் பூச்சிமுருகன், விக்னேஷ், மருதுபாண்டியன், எம்.ஏ.பிரகாஷ், பழ.காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 வருவாய்த்துறை அமைச்சர் ஷாஜகான் கலந்து கொண்டு, `நாடகத்தந்தை சங்கரதாஸ் சுவாமிகளை கொண்டாடுவோம்’ என்ற நூலை வெளியிட்டார். அதனை புதுவை நாடக கலை சங்க தலைவர் புதுவைதாசன், முன்னாள் செயலாளர் மாயகிருஷ்ணன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.  இவ்விழாவில் அமைச்சர் ஷாஜகான் பேசியதாவது: நாடகத்துறை ஆசானாக திகழ்கின்ற சங்கரதாஸ் சுவாமிகளின் நினைவஞ்சலி ஆண்டுதோறும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. சிவாஜி, எம்ஜிஆர், எம்.ஆர்.ராதா போன்ற பெரிய நடிகர்கள் நாடகத்துறையிலிருந்துதான் வந்தனர். சிறிது சிறிதாக நாடக கலை நலிந்து கொண்டிருக்கும் நேரத்தில், அதனை உயிர்ப்பித்து வளர்க்கும் வகையில் கலை, இலக்கிய பெருமன்றம் செயல்பட்டு வருகிறது. நான் கலை, பண்பாட்டு துறை அமைச்சராக இருந்தபோது, புதுவை மாநிலத்தில் நாடகப்பள்ளி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்தனர். புதுவை அரசு பொறுத்தவரை நாடகப்பள்ளி அமைக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.  இந்நிகழ்ச்சியில் சிபிஎம் மாநில செயலாளர் சலீம், முன்னாள் அமைச்சர் விசுவநாதன், அரிமளம் பத்மநாபன், கலை இலக்கிய பெருமன்ற தலைவர் எல்லை.சிவக்குமார் மற்றும் நாடக கலைஞர்கள், தெருக்கூத்து கலைஞர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags : Sankaradas Swamigal Memorial ,New Delhi ,
× RELATED தேர்தலையொட்டி கெத்து காட்டும்...