தேசிய பேரிடர் மீட்புக் குழுவுடன் மேலாண்மை இயக்குனர் ஆலோசனை

புதுச்சேரி, நவ. 14: கஜா புயலை எதிர்கொள்ள புதுச்சேரி அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை  ஏற்பாடுகளை செய்து வருகிறது. இதன் ஒருபகுதியாக அரக்கோணத்தில் இருந்து 25  பேர் கொண்ட தேசிய பேரிடர் குழுவினர் மீட்பு குழுவுக்கு தேவையான  உபகரணங்களுடன் நேற்று புதுச்சேரி வந்தடைந்தனர்.  புதுச்சேரி லாஸ்பேட்டை,  இசிஆரில் உள்ள பேரிடர் மேலாண்மை துறை அலுவலத்தில் தேசிய மீட்புக்  குழுவினருடன் புதுச்சேரி பேரிடர் மேலாண்மை இயக்குனர் பங்கஜ்குமார் ஜா  ஆலோசனை நடத்தினார். அப்போது, பேரிடர் பணிகள் குறித்து அவர் விளக்கினார்.

  பின்னர் பங்கஜ் குமார் ஜா நிருபர்களிடம் கூறுகையில், வானிலை ஆய்வு மையம்  15, 16ம் தேதிகளில் ரெட் அலர்ட் விடுத்ததன் காரணமாக அரக்கோணத்தில் இருந்து  தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் புதுச்சேரி வந்துள்ளனர். புதுச்சேரி  மட்டுமின்றி காரைக்காலிலும் பாதிப்பு ஏற்படலாம் என்பதால் 25 பேர்  வந்துள்ளனர்.

 வருவாய், பொதுப்பணி, தீயணைப்பு, மீன்வளத்துறை மட்டுமின்றி  கடலோர காவல்படை மற்றும் போலீசார் உள்ளிட்ட அனைத்து துறைகளும் கஜா புயல்  பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மீனவர்கள் அடுத்த 3 நாட்களுக்கு  மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  இதேபோல் வருகிற 15ம்தேதியன்று பொதுமக்கள் கடலோர பகுதிகளுக்கு செல்ல  வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. புதுச்சேரியில் இருந்து 10  படகுகளில் கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் இன்றுக்குள் கரைக்கு  திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

Related Stories: