பத்திரிகை கொடுப்பதுபோல் நடித்து கைவரிசை வீடுகளில் தனியாக இருக்கும் பெண்களிடம் நகை பறித்த கும்பல்

புதுச்சேரி, நவ. 14: புதுவையில் வீடுகளில் தனியாக இருக்கும் பெண்களை நோட்டமிட்டு அவர்களிடம் திருமண பத்திரிகை கொடுப்பதுபோல் நடித்து ஒரு கும்பல் துணிகர நகை பறிப்பில் ஈடுபட்டிருப்பது அம்பலமாகி உள்ளது. இதுதொடர்பாக மரக்காணம் வாலிபரை அதிரடியாக கைது செய்துள்ள போலீசார் தப்பிஓடிவிட்ட பெண் உள்ளிட்ட மேலும் 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். புதுவை, லாஸ்பேட்டை, முத்துலிங்கம்பேட், காமராஜர் வீதியில் வசிப்பவர் முருகன் என்ற கிருஷ்ணன் (49). அப்பகுதியில் காய்கறி கடை வைத்துள்ளார். இவரது மனைவி இந்திரா (45). குடும்ப தலைவியான இவர் நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அங்கு ஒரு பெண் உள்பட 3 பேர் வந்தனர். தாங்கள் திருமண பத்திரிகை வைக்க வந்திருப்பதாக கூறவே, 3 பேரையும் இந்திரா வீட்டிற்குள் அனுமதித்தார். உள்ளே சென்ற 3 பேரும் திருமண பத்திரிகை தட்டு வைப்பதுபோல் நடித்து திடீரென இந்திராவின் வாயை பொத்தியுள்ளனர்.

 அவர் அதை தட்டிவிட்டு கூச்சலிடவே சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். டிஜிபி அலுவலகத்தில் காவலராக பணிபுரியும் எல்லைபிள்ளைச் சாவடியைச் சேர்ந்த செல்வமும் அங்குள்ள தனது நண்பர் வீட்டிற்கு வந்திருந்த நிலையில் சத்தம் கேட்டு இந்திரா வீட்டிற்கு வந்தார். அப்போது அங்கிருந்த பெண் உள்பட 2 பேர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்ட நிலையில் ஒருவரை மட்டும் பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். பின்னர் அவர் லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.  இன்ஸ்பெக்டர் நாகராஜ், சப்-இன்ஸ்பெக்டர் ஜாகீர் உசேன் தலைமையிலான போலீசார் அந்த நபரை காவல் நிலையம் அழைத்துச் சென்று அதிரடியாக விசாரித்தனர். விசாரணையில் அவர், விழுப்புரம் மாவட்டம், மரக்காணம், கூனிமேடு, திப்புசுல்தான் வீதியைச் சேர்ந்த அப்துல் இமாத் (22) என்பதும், தனியார் மருத்துவமனையில் லேப் டெக்னீசியனாக பணியாற்றி அவர், 2 வாரமாக வேலைக்கு செல்லாமல் இருந்ததும் தெரியவந்தது.

 அதே பகுதியைச் சேர்ந்த இப்ராகிம் என்பவரின் தூண்டுதலின்பேரில் சாரம் கவிக்குயில் நகரைச் சேர்ந்த விண்ணரசி மற்றும் கணேஷ் ஆகியோருடன் சேர்ந்து அப்துல் இமாத், வீடுகளில் தனிமையில் பெண்கள் இருப்பதை நோட்டமிட்டு அந்த வீடுகளுக்கு சென்று பத்திரிகை கொடுப்பதுபோல் நடித்து துணிகர வழிப்பறியில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அப்துல் இமாத் மீது வழக்குபதிந்து அதிரடியாக கைது செய்த போலீசார் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது வேறு எந்தெந்த இடங்களில் இதேபோல் வீடுபுகுந்து நகை, பணத்தை திருடிச் சென்றார்கள் என்பது தொடர்பாக விசாரணை நடக்கிறது. இதில் அடுத்தடுத்து திடுக்கிடும் தகவல் வெளியாகி வருவதால் போலீசார் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடக்கிறது. இதனிடையே தப்பிஓடிவிட்ட விண்ணரசி, கணேஷ் மற்றும் முக்கிய குற்றவாளி இப்ராகிம் ஆகியோரை கைது செய்யவும் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் 3 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: