×

மழையை பொறுத்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படும் புயலை எதிர்கொள்ள அனைத்து துறைகளும் தயார்

புதுச்சேரி, நவ. 14: புதுச்சேரியில் கஜா புயலின் தாக்கத்தை எதிர்கொள்ள அரசு தயாராக இருப்பதாகவும், மழை பெய்வதை பொறுத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் எனவும் முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார். புதுச்சேரியில் கஜா புயலை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் தலைமை செயலகத்தில் நேற்று நடந்தது. முதல்வர் நாராயணசாமி தலைமை தாங்கினார். அமைச்சர்கள் நமச்சிவாயம், ஷாஜகான், கமலக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வளர்ச்சி ஆணையர் அன்பரசு, அரசு செயலர்கள் தேவேஷ் சிங், சரண், சுந்தரவடிவேலு, அலிஸ் வாஸ், மாவட்ட ஆட்சியர் அபிஜித் விஜய் சவுத்ரி, டிஐஜி சந்திரன், சீனியர் எஸ்பி பர்ன்வால் மற்றும் பொதுப்பணி, உள்ளாட்சி, மின்சாரம், சுகாதாரம், கல்வி, தீயணைப்பு, கடலோர காவல் படை, வனத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 இந்த கூட்டத்தில், கஜா புயல் தாக்கம் குறித்தும், அதனை எதிர்கொள்ள ஒவ்வொரு துறைவாரியாக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.  கூட்டத்துக்கு பின் முதல்வர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:  கஜா புயல் 15ம்தேதி (நாளை) கரையை கடக்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக புதுவை அரசுக்கும் தகவல் தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் அமைச்சர் ஷாஜகான், அதிகாரிகளை அழைத்து தயார் நிலையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். தாழ்வான பகுதியில் தண்ணீர் தேங்கினால் உடனே வெளியேற்ற வேண்டும். மீனவர்கள் கடலுக்கு செல்லக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.  காற்றின் வேகம் 100 முதல் 120 கி.மீ. வேகத்தில் இருக்கும் என்றும், நாகப்பட்டினத்துக்கும் கடலூருக்கும் இடையே புயல் கரையை கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் தாக்கம் புதுச்சேரியிலும் இருக்கும். எனவே, தண்ணீர் தேங்கும் பகுதியில் உடனடியாக தண்ணீரை வெளியேற்ற வேண்டும். தாழ்வான பகுதியில் உள்ள மக்களை சமுதாய கூடங்கள், பள்ளி கூடங்களில் தங்க வைத்து உணவு பொருட்கள் கொடுக்க வேண்டும். தேவையான மருந்துகளை வைத்திருக்க வேண்டும். காவல்துறையும், தீயணைப்பு துறையும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளேன். மத்தியில் இருந்து புதுச்சேரி, காரைக்காலுக்கென 2 தேசிய பேரிடர் மீட்புக்குழு வந்துள்ளது.

 காரைக்காலில் புயலின் தாக்கம் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளதால், நேற்று முன்தினம் அமைச்சர் கமலக்கண்ணன், மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளை அழைத்து புயலை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என  உத்தரவிட்டுள்ளார். 14ம்தேதி (இன்று) காலை காரைக்காலில் புயல் முன்னெச்சரிக்கை பணிகள் தொடர்பான கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் நான் கலந்து கொண்டு, முன்னெச்சரிக்கை பணிகளுக்கான ஏற்பாடுகளை பார்க்க உள்ளேன். எல்லா துறைகளிலும் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு, ஆயத்தமான நிலையில் இருக்கின்றன. இந்த புயலை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது. மேலும், புதுச்சேரியில் இருந்து 12 படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். அதில் 10 படகுகள் கரை திரும்பி விட்டன. காரைக்காலில் இருந்து கடலுக்கு 2 படகில் சென்ற 8 மீனவர்கள் மட்டும் கரைக்கு திரும்பி வர வேண்டும். மழை பெய்வதை பொறுத்து பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை அறிவிப்பு வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : departments ,storm ,schools ,holidays ,
× RELATED பிரதமர் ரோடு ஷோவில் மாணவர்கள்...