அடிப்படை வசதிகள் செய்துதரக்கோரி கோவில்பட்டி ஒன்றிய அலுவலகம் முற்றுகை

கோவில்பட்டி, நவ.14: கோவில்பட்டி அருகே தாமஸ்நகரில் அடிப்படை வசதிகள் செய்துதரக்கோரி கிராம மக்கள் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். கோவில்பட்டி அருகே இலுப்பையூரணி பஞ்சாயத்திற்கு உட்பட்ட தாமஸ்நகர் பகுதியில் உடைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை சீரமைக்க வேண்டும். அத்துடன் பழுதடைந்த நிலையில் உள்ள ரேஷன் கடைகளை சீரமைக்க வேண்டும். குண்டும் குழியுமாக  காணப்படும் மணிக்கூண்டு ரோட்டை சீரமைக்க வேண்டும். வாறுகாலில் தேங்கும் கழிவுநீரை அவ்வப்போது அகற்ற வேண்டும். கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட தாமஸ்நகரில் உள்ள அங்கன்வாடி கட்டிடத்திற்கு பதிலாக புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்ட வேண்டும்.  

100 நாட்கள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பணியாற்ற மனு அளித்துள்ள அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்.  இத்திட்டத்திற்கான புதிய அடையாள அட்டைகளை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி தாமஸ்நகர் பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் திரண்டு வந்து கோவில்பட்டி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இலுப்பையூரணி ஆதிதிராவிடர் சமூக சங்கம் சார்பில் நடந்த இப்போராட்டத்திற்கு ஊர்த் தலைவர் சிவசாமி, செயலாளர் கவுசல்யா   தலைமை வகித்தனர். இதைத் தொடர்ந்து கிராம மக்கள் கோரிக்கை மனுவை பிடிஓ ஹரியிடம் அளித்து சென்றனர்.

Related Stories: