நெல்லை ஆவின் நிறுவனத்தில் ரூ.10 கோடியில் உள்கட்டமைப்பு வசதி தலைவர் சின்னதுரை தகவல்

தூத்துக்குடி,நவ.14: நெல்லை ஆவின் நிறுவனத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளதாக அதன் தலைவர் சின்னதுரை தெரிவித்தார். நெல்லை மாவட்டம் ரெட்டியார்பட்டியில் உள்ள ஆவின் நிறுவனத்தில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக நெல்லை, தூத்துக்குடி ஆவின் தலைவர் சின்னதுரை,  பொதுமேலாளர் ரங்கநாததுரை  ஆகியோர் ஆய்வு செய்தனர். இது குறித்து ஆவின் தலைவர் சின்னத்துரை கூறுகையில்: நெல்லை ஆவின் நிறுவனத்தை  மேம்படுத்தப்படுவதற்கான பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. நெல்லை புதிய பஸ் நிலையத்தில் ரூ.50 லட்சம் செலவில் நவீன ஆவின் பாலகம், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் சுமார் 30 ஆவின் பார்லர்கள் அமைத்து பொதுமக்களுக்கு தரமான பால் மற்றும் உபபொருட்கள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ரூ.52 லட்சம் செலவில் கப்புகளில் தயிர் நிரப்பும் இயந்திரம் அமைக்கப்பட்டு வருகிறது. விலையில்லா கறவை மாடு திட்டத்தின் கீழ் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் மற்றும் விதவை பெண்கள் பயன்பெறும் வகையில் 5 ஆயிரத்து 158 கறவைமாடுகள் வழங்கப்பட்டு தினமும், சுமார் 4 ஆயிரத்து 600 லிட்டர் பால் நெல்லை ஆவின் நிறுவனம் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. கூட்டுறவு சங்கங்கள் மூலம் பால் கொள்முதலை 1 லட்சம் லிட்டராக உயர்த்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த ஒன்றியத்தில் சராசரியாக தினமும் 42 ஆயிரத்து 500 லிட்டர் பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. உபரியான பால் திருவனந்தபுரம் மற்றும் கன்னியாகுமரி ஒன்றியத்திற்கு அனுப்பப்பட்டு வருகிறது.

தினசரி உள்ளூர் விற்பனையை 42 ஆயிரத்து 500 லிட்டரில் இருந்து 60 ஆயிரம் லிட்டராக உயர்த்துவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நெல்லை ஆவினில் ரூ.10கோடியில் உள்கட்டமைப்பு வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பால் உற்பத்தியாளர்களுக்கு நிலுவையின்றி 31.10.2018 வரை பணம் பட்டுவாடா செய்யப்பட்டு உள்ளது. பால் உற்பத்தியாளர்களுக்கு தள்ளுபடி விலையில் கால்நடை தீவனம் சுமார் 220 டன் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஒன்றியம் 2017-18-ம் நிதியாண்டில் ரூ.84.2 லட்சமும், 2018-19ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை ரூ.32.52 லட்சமும் லாபம் ஈட்டி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: