வைகுண்டம் அருகே சாலையோரம் வாகனஓட்டிகளை அச்சுறுத்தும் மரக்கிளைகள்

வைகுண்டம், நவ.14: வைகுண்டம் அருகே நெல்லை-திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் தலைகீழாக தொங்கும் ஆலமரக்கிளைகளை அகற்றிட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆன்மிக சிறப்புபெற்ற திருச்செந்தூரை, நெல்லையுடன் இணைக்கும் வகையில் இந்நகரங்களுக்கு இடையே இரவு, பகல் பாராமல் எப்போதும் வாகன போக்குவரத்து இருந்து  வருகிறது. இந்த வழித்தடத்தில் ஆறுமுகநேரி, குரும்பூர், தென்திருப்பேரை, ஆழ்வார்திருநகரி, வைகுண்டம், கருங்குளம், செய்துங்கநல்லூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்கள் அமைந்துள்ளன. போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த இந்த நெடுஞ்சாலையில் வாகனங்களின் போக்குவரத்து அதிகரித்துக்கொண்டே தான் வருகின்றன. திருநெல்வேலி-திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் வைகுண்டத்திற்கும்-கருங்குளத்திற்கும் இடையே சாலையானது மிகவும் அபாயகரமான வளைவுகளுடன் அமைந்துள்ளது.

 சாலையின் இருபுறமும் மருதம், வேம்பு, புங்கை, புளி, ஆலமரம், வாகை என அதிக அளவிலான மரங்கள் மிகப்பெரிய அளவில் அடர்ந்து வளர்ந்து நிற்கின்றன. ஆண்டுகள் பல கடந்து மிகவும் வயதான நிலையிலுள்ள சில மரங்கள் ஆபத்தான நிலையிலே நின்று வருகின்றன. சிலமரங்கள் முழுமையாக பட்டுபோயும், சிலமரங்களில் சில கிளைகள் மட்டும் பட்டுபோயும் எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் வகையில் ஆபத்தாக காட்சி அளித்து வருகின்றன. இந்தவகையில் கருங்குளம் தண்ணீர்துறைக்கு அடுத்து வளைவான பகுதியில் பழமையான ஆலமரத்தின் கிளை பட்டுபோய் தலைகீழாக தொங்கி கொண்டு இருக்கிறது. ஆபத்தான நிலையிலுள்ள இந்த மரக்கிளை இதுவரை அகற்றப்படவே இல்லை. எனவே மரக்கிளை விழுந்து விபத்து ஏற்படுத்தும் முன்பு அதனை அகற்ற வேண்டுமென வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இதுகுறித்து, தமிழ்மாநில காங்கிரஸின் மாநில இளைஞர் அணி பொதுச்செயலாளர் ஜெகநாதராஜா கூறுகையில், ‘நெல்லை-திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் பட்டுப்போய் தொங்கி கொண்டு இருக்கும் ஆபத்தான ஆல மரக்கிளையால் வாகனஓட்டிகள் பெரும் அச்சத்துடனே பயணித்து வருகின்றனர். இந்த கிளை திடீரென்று விழுந்தால் மிகப்பெரும் விபத்தும், உயிர்ப்பலியும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. எனவே பயணிகள் மற்றும் பக்தர்களின் உயிரை பாதுகாத்திடும் வகையில் சம்பந்தப்பட்ட துறையினர் இந்த நெடுஞ்சாலையில் ஆபத்தான நிலையிலுள்ள பட்டுப்போன மரங்களையும், பட்டுப்போன நிலையிலுள்ள மரக்கிளைகளையும் துரிதமாக அகற்றிடவேண்டும்’ என்றார்.

Related Stories: