×

குடிமை பொருள் வழங்கல் துறை அலுவலகத்தை முற்றுகை- பரபரப்பு

புதுச்சேரி, நவ. 13:  புதுவை அரசின் தீபாவளி பணம் வங்கிக் கணக்கில் கிடைக்கப் பெறாதவர்கள் ரேசன் கார்டுகளுடன் குடிமை பொருள் வழங்கல் துறையை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  தீபாவளி பண்டிகையையொட்டி புதுச்சேரியில் கட்டுமான ஊழியர்கள், அமைப்பு சாரா ஊழியர்களுக்கு தீபாவளி பரிசு கூப்பனுக்கு பதிலாக ரொக்கம் செலுத்தப்பட்டது. இவற்றை பயனாளிகள் ஒவ்வொருவரும் அவர்களின் வங்கிக் கணக்கில் எடுத்து வருகின்றனர்.

 இதேபோல் தீபாவளிக்காக மக்களுக்கு அறிவிக்கப்பட்ட அரிசிக்கான மானியத் தொகை, இலவச துணிமணிக்கான சலுகை நிதியும் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் கடந்த வாரம் செலுத்தப்பட்டது. ஆதிதிராவிட பயனாளிகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச துணிக்கு பதிலாக ரூ.500ம், இலவச அரிசி- சர்க்கரைக்கு பதிலாக சிவப்பு ரேசன் கார்டுதாரர்களுக்கு தலா ரூ.1,275ம், மஞ்சள் அட்டைதாரர்களுக்கு ரூ.675ம் அவரவரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டன.

 இதுதவிர முதியோர் பென்ஷன் தொகையும் முன்கூட்டியே வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது.  இப்பணத்தை எடுக்க பயனாளிகள், முதியவர்கள், கட்டிட தொழிலாளர்கள், பொதுமக்கள் வங்கிகளில் முகாமிட்டதால் ஒருவாரமாக அங்கு கூட்டத்தை அதிகளவில் காண முடிந்தது.  இதனிடையே தீபாவளிக்கான அரசின் பணம் சிலருக்கு கிடைக்கப்பெறவில்லை. அவர்களின் வங்கிக் கணக்கில் இதுவரை பணம் செலுத்தப்படாத நிலையில் பாதிக்கப்பட்ட சிவப்பு மற்றும் ரேசன் அட்டைதாரர்கள் நேற்று உரிய ஆதாரங்களுடன் குடிமை பொருள் வழங்கல் துறையை முற்றுகையிட்டனர்.


 அப்போது தங்களுக்கு தீபாவளி பணம் வங்கிக் கணக்கில் செலுத்தப்படாதது குறித்து அங்கிருந்த அதிகாாிகளிடம் முறையிட்டனர். அவற்றை கேட்டறிந்த அதிகாரிகள், இன்னும் 10 நாட்களில் விடுபட்டவர்கள் அனைவருக்கும் தீபாவளி பணத்தை வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அப்போது உரிய ஆவணங்களை கொடுத்து விடுபட்டவர்கள் அதை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

Tags : Siege ,Department of Civil Supplies Supply ,
× RELATED லட்சக்கணக்கில் விவசாயிகள் முற்றுகை...