மதுரை மீனாட்சியம்மன் கோயிலை பகல் நேரம் முழுவதும் திறக்க வேண்டும் பக்தர்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

மதுரை, நவ. 12: மதுரை மீனாட்சியம்மன் கோயிலை பகல் நேரம் முழுவதும் திறக்க வேண்டும் என பக்தர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். உலக புகழ் பெற்ற கோயில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஒன்றாகும். இங்கு தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும்  தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வருகை தருகின்றனர். இதுபோல் வெளிநாட்டு சுற்றுலா வருபவர்களும் கோயிலுக்கு அதிகமாக வந்து செல்கின்றனர். அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு மதியம் 12.30 மணிக்கு நடை சாத்தப்படுகிறது. பின்னர் மாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 9 மணிக்கு சாத்தப்படுகிறது.

பகல் 12.30 மணிக்கு மேல் 4 மணி வரை சுவாமி தரிசனம் செய்ய முடியாத நிலையில் வெளியில் இருந்து வரும் பக்தர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நேரங்களில் பக்தர்கள் ஓய்வு எடுக்க கோயில் சார்பில் ஓய்வறைகளை அமைக்க வேண்டும். மேலும் 5 கோபுர வாசலை சுற்றிலும் நிழற்குடை அமைக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் தற்போது தெற்கு கோபுர வாசலில் மட்டுமே நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள 4 கோபுர வாசலிலும் அமைக்க கோரிக்கை வலுத்துள்ளது.

 தற்போது வெளி மாவட்ட பக்தர்கள் அதிகமாக வருவதை அறிந்து பல்வேறு பகுதிகளை சேர்ந்த நபர்கள் பழைய சேலைகள் மற்றும் ஆடம்பர பொருட்களை கொண்டு வந்து கூடுதலாக விற்பனை செய்து வருகின்றனர். வெளிநாட்டு நபர்களிடம் ஏமாற்றி வருகின்றனர். இப்படி பல்வேறு குறைபாடுகளை சரிப்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது.

மதுரை திருநகரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் முத்து கூறும்போது, ‘‘மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் வருடம் தோறும் 100 கோடிக்கு மேல் வருமானம் வருகிறது. இந்த வருமானத்தை வங்கியில் தான் வைப்பு நிதியாக வைத்து வருகின்றனர்.

அதில் ஒரு பங்கு கூட பக்தர்களின்வசதிகளுக்கு செலவு செய்வதில்லை. அவசர வசதிக்கு ஆம்புலன்ஸ் கூட இல்லை. நிர்வாகம் சார்பில் ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ வசதிகளை ஏற்படுத்த வேண்டும். ஐயப்ப சீசன் துவங்குவதால் பக்தர்கள் நலன் கருதி மேலும் கூடுதல் வசதிகளை ஏற்படுத்த வேண்டும்’’ என்றார்.

Related Stories: