வத்தலக்குண்டுவில் குடிநீர் தொட்டியருகே குவிக்கப்படும் குப்பைகள் சுகாதாரம் பேசும் பேரூராட்சியே செய்கிறது

வத்தலக்குண்டு, நவ. 12: வத்தலக்குண்டு ஸ்டேட் பேங்க் காலனியில் குடிநீர் தொட்டி அருகே குப்பைகளை குவித்து வருவதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வத்தலக்குண்டு- திண்டுக்கல் சாலையில் ஸ்டேட் பேங்க் காலனி அருகே ஒரு உயர்நிலை குடிநீர் தொட்டி உள்ளது. இதனருகே சேவுகம்பட்டி பேரூராட்சி குப்பைகளை கொட்டி குவித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் கொசுக்கள் பல்கி பெருகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுதவிர குடிநீர் தொட்டி அருகே குப்பைகள் கொட்டுவதால் தண்ணீரும் மாசுபடும் நிலைமை ஏற்பட்டுள்ளது. மேலும் அங்கு நாய்கள், பன்றிகள் அதிகளவில் திரிவதால் பொதுமக்களுக்கு தொந்தரவு ஏற்படுகிறது.

 

டெங்கு விழிப்புணர்வு பிரசாரம், கொசு மருந்து அடித்தல் உள்ளிட்ட பல்வேறு சுகாதார பணிகளை செய்தும் வரும் பேரூராட்சியே குப்பைகளை குவித்து கொசு உருவாக வழிவகை செய்வது தவறு என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட பேரூராட்சி நிர்வாகம் விரைவில் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: