கொடைக்கானல் ஏரியில் கழிவுநீரை கலக்கவிட்டால் கடும் நடவடிக்கை

கொடைக்கானல், நவ. 12:  கொடைக்கானல் ஏரியில் கழிவுநீரை கலக்கவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி நோட்டீஸ் விநியோகித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. கொடைக்கானல் ஏரி மாசுபடுவதை தடுக்க பொதுமக்கள், தன்னார்வலர்கள், அரசியல் கட்சியினர் என பல்வேறு தரப்பினரும் குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் நகராட்சி சார்பில், தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920 பிரிவு 321 (4) மற்றும் பொது சுகாதார சட்டம் 1939 பிரிவு 27 ,28 ,34 ,35 , 36ன் கீழ் கொடைக்கானல் ஏரியை சுற்றியுள்ள ஓட்டல்கள், தங்கும் விடுதிகள், ரிசார்ட்டுகள், பள்ளிகள், குடியிருப்புகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது.

அதில், ‘‘ஏரி மாசுபடுவதை தடுக்க தங்கள் பகுதிகளில் இருந்து கழிவுநீர் வெளியேற்ற என்ன மாதிரியான வழிவகை செய்யப்பட்டுள்ளது, அதற்குரிய கட்டுமானம், வரைபடம் என்ன, கழிவுநீர் வெளியேற்றத்திற்கு நகராட்சி வழங்கிய அனுமதி, கழிவுநீரை அப்புறப்படுத்தும் விதம் உள்ளிட்டவைகள் பற்றிய விளக்கங்களை நோட்டீஸ் பெற்றவுடன் 15 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்’’ என கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது கூறியதாவது, ‘‘நோட்டீஸ் பெற்றவர்கள் அளித்த தகவல்களின்படி நேரடி ஆய்வு மேற்கொள்ளப்படும். ஏரியில் கழிவுநீரை கலக்குவது கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.

Related Stories: