பாதை வசதி இல்லாததால் விவசாயிகள் போராட்டம்

கும்பகோணம், நவ. 8:  பாதை வசதி இல்லாததால் கொற்கை பொற்கலக்குடி கிராமத்தில் வயலில் இறங்கி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

கும்பகோணம் அடுத்த கொற்கை பொற்கலக்குடி கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கு அப்பகுதியில் 200 ஏக்கர் விவசாயி நிலங்கள் உள்ளன. இந்த வயல்களுக்கு சென்று விவசாயம் செய்வதற்கு சாலையோரத்தில் இருந்த பாதையை கடந்த 80 ஆண்டுகளாக அப்பகுதி விவசாயிகள் பயன்படுத்தி வந்தனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் விவசாயிகள் பயன்படுத்தி வந்த பாதை, தனிநபருக்கு சொந்தமானது என தெரியவந்தது. இதையடுத்து அதன் அருகில் இருக்கும் புறம்போக்கு பாதையை விவசாயிகள் பயன்படுத்த முடிவு செய்தனர். ஆனால் புறம்போக்கு நிலத்தை அப்பகுதியை சேர்ந்த ஒருவர் ஆக்கிரமித்து வைத்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் சென்று வயலுக்கு சென்றுவர பாதை வேண்டுமென விவசாயிகள் கேட்டனர். ஆனால் அவர் மறுக்கவே கடந்த 3 ஆண்டுகளாக விவசாயிகள், வயலுக்கு செல்ல பாதை இல்லாததால் விவசாயம் செய்வதில் சிரமத்தை அனுபவித்தனர்.

இதுகுறித்து கும்பகோணம் சப் கலெக்டரிடம் விவசாயிகள் புகாரளித்ததின்பேரில் அப்போதைய தாசில்தார் பார்வையிட்டு அரசுக்கு சொந்தமான நிலம் உள்ளது என உறுதி செய்து ஆக்கிரமிப்பை காலி செய்ய வேண்டும் என்றார். ஆனால் ஆக்கிரமிப்பு அகற்றவில்லை. மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்காததால் கொற்கை பொற்கலக்குடி கிராமத்தில் வயலில் இறங்கி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

Related Stories: