×

குடியிருப்பு பகுதியை ஆக்கிரமித்தகருவேல முட்புதர் அகற்றப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

கரூர், நவ. 8: கரூர் நகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலை வெங்கடேஷ்வரா நகர்ப்பகுதியில் சூழ்ந்துள்ள முட்புதர்களை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுநல ஆர்வலர்கள் கோரி
க்கை விடுத்துள்ளனர்.கரூர் மாவட்டம் முழுதும் மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமையில் குழுவினர் பல்வேறு பகுதிகளுக்கு சென்று டெங்கு தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், பொதுமக்கள் தாங்கள் குடியிருக்கும் வீடுகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். வீட்டை சுற்றிலும் உள்ள முட்புதர்களை அகற்றி, கொசு உற்பத்தியாகாமல் தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. மேலும், அவ்வாறு சுத்தம் பராமரிக்காத பொதுமக்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கொசுக்கள் உற்பத்தி, விஷ ஐந்துகளின் நடமாட்டம் போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கு முக்கிய காரணியாக கரூர் நகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலை வெங்கடேஷ்வரா
நகர்பகுதி உள்ளது.வெங்கடேஷ்வரா நகரில் நான்குக்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இதில், பெரும்பாலான பகுதிகளில் வீடுகள் கட்டப்பட்டிருந்தாலும், தனியாருக்கு சொந்தமான ஏராளமான இடங்களில் வீடு கட்டாமல் காலி மனைகளாகவே போடப்பட்டுள்ளன.காலியிடங்களை சுற்றிலும் அதிகளவு முட்புதர்கள் வளர்ந்து மோசமான நிலையில் உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், மாவட்ட நிர்வாகம் இதேபோல, இப்பகுதியை பார்வையிட்டு, பொக்லைன் மூலம் இடங்களை சுத்தம் செய்து அபராதம் விதித்து சென்றனர். அதன்பிறகும், எந்தவித விழிப்புணர்வும் இல்லாமல் காலியிடங்கள் தொடர்ந்து காலியாகவே உள்ள காரணத்தினால் திரும்பவும் இந்த பகுதிகளில் வீடுகளை விட அதிகளவு உயரமான அளவுக்கு முட்புதர்கள் வளர்ந்துள்ளது. இந்த முட்புதர்களில் விஷ ஐந்துகளின் நடமாட்டமும், கொசுக்களின் உற்பத்திக்கு வழிவகுக்கும் வகையில் உள்ளதால் இரவு நேரங்களில் பகுதி மக்கள் நடமாடவே முடியாத நிலையில் உள்ளது.இதுகுறித்து யாரிடம் புகார் தெரிவிப்பது என்பது குறித்தும் தெரியாமல் உள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதிகளை பார்வையிட்டு, முட்புதர்களை அகற்ற தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என பொதுநல ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : Occupied Bunker Removal ,Residential Area ,
× RELATED ஏராளமான பக்தர்கள் குவிந்தனர் டீ...