மாநகர் முழுவதும் குவிந்த பட்டாசு கழிவுகள்

கோவை, நவ.8:  கோவை மாநகர் முழுவதும் குவிந்து காணப்படும் பட்டாசுக்கழிவுகள் உள்ளிட்ட அனைத்து வகை குப்பை கழிவுகளும் நேற்று முதல் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  

 கோவை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட 100 வார்டுகளில் 3,500க்கும் மேற்பட்ட வீதிகள் உள்ளது. மாநகரில் தினசரி சராசரியாக 900 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. மாநகராட்சியில் பணியாற்றும் நிரந்தர மற்றும் ஒப்பந்த துப்புரவு ெதாழிலாளர்கள் மூலம் இந்த குப்பைகள் சேகரிக்கப்பட்டு வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் கொண்டு செல்லப்பட்டு கொட்டப்படுகிறது.  தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த செவ்வாய்கிழமை மாநகரில் துப்புரவு பணிகள் மேற்ெகாள்ளப்படவில்லை.

தீபாவளிக்கு முந்தைய தினமான கடந்த திங்கள்கிழமை மாைல முதலே மக்கள் பட்டாசுகள் வெடிக்க துவங்கி விட்டனர். அதேபோல், தீபாவளி தினத்தன்றும் மக்கள் அதிகளவில் பட்டாசுகள் வெடித்தனர். சரவெடி வகைகளும், பேன்சி ரக பட்டாசுகள் அதிகளவில் பொதுமக்களால் வைத்து வெடிக்கப்பட்டது.

 இதனால் மாநகர் முழுவதும் பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகளில் பட்டாசு கழிவுகள், பட்டாசுகள் இருந்த பெட்டிகள் தேங்கி கிடந்தது. அதேபோல், துப்புரவு பணிகள் செவ்வாய்கிழமை மேற்கொள்ளப்படாததால் மாநகரிலுள்ள பெரும்பாலான குப்பைத்தொட்டிகளும் நிரம்பி வழிந்தது. பட்டாசு கழிவுகள் மட்டுமின்றி வீடுகளை சுத்தம் செய்ததால் சேகரமான குப்பைக்கழிவுகள், பூக்கழிவுகள், பழக்கழிவுகள் போன்ற கழிவுகளும் சேர்ந்து கிடந்தது.

 நேற்று காலை முதலே மாநகரில் குப்பைகள் சேகரிக்கும் பணி மீண்டும் மேற்கொள்ளப்பட்டது. நேற்று மாலை நிலவரப்படி மாநகரில் இருந்து பட்டாசு கழிவுகள் உள்ளிட்ட அனைத்து வகை குப்பை கழிவுகளையும் சேர்த்து 950 டன் சேகரிக்கப்பட்டது. இவை வெள்ளலூர் குப்பைக்கிடங்கில்  கொட்டப்பட்டது.

Related Stories: