கோவை மாவட்டத்தில் தனியார், அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர்களின் கல்வித்தகுதி சரிபார்ப்பு

கோவை, நவ.8:  கோவை தனியார் சுயநிதி பள்ளிகளில் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள் தகுதியானவர்களா என்பதை கண்டறிய ஆசிரியர்களின் சான்றிதழை சரிபார்க்க கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

 தமிழகத்தில் செயல்படும் அரசு உதவிபெறும், சுயநிதி தொடக்க பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் குறைந்தபட்ச கல்வித்தகுதியாக 2 வருட இடைநிலை ஆசிரியர் பட்டய பயிற்சி முடித்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கல்வித்தகுதியை பெறாமல், பயிற்சியின்றி பணியாற்றும் ஆசிரியர்கள் பயிற்சி முடிக்க ஏதுவாக தேசிய ஆசிரியர் கல்வி நிறுவனத்தால் 5 ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்பட்டது.

 ஆசிரியர்கள் மேல்நிலைக்கல்வியில் குறைந்தபட்சம் 50 சதவீதம் மதிப்பெண் பெறாமல், பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் ஓடிஎல் எனப்படும் ஓபன் டிஸ்டன்ஸ் லேர்னிங் மூலம் இரண்டாண்டு தொடக்க கல்வி ஆசிரியர் பட்டய பயிற்சியினையும், மேலும் மேல்நிலைக் கல்வியில் 50 சதவீத மதிப்பெண் அளவுக்கு உயர்த்திக்கொள்ள கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

 இந்த குறைந்தப்பட்ச கல்வித்தகுதி பெறாதவர்கள் 2019ம் ஆண்டு மார்ச் மாதம் பின் பணியில் தொடர முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாவட்டத்தில் உள்ள அரசு உதவிபெறும், தனியார் சுயநிதி பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் கல்வித்தகுதியினை ஆய்வு செய்ய தொடக்க கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து கோவை மாவட்டத்தில் உள்ள தனியார், சுயநிதி தொடக்க பள்ளிகளில் ஆசிரியர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு பணி குறித்து பள்ளிகளில் ஆய்வு நடத்தப்பட உள்ளது.

 இதையடுத்து ஆசிரியர்கள் தங்களது கல்வி சான்றிதழை, பள்ளிக்கு கொண்டுவருமாறு நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக தொடக்க கல்வி அலுவலர்களும் தங்களது எல்லைக்குட்பட்ட பள்ளிகளில் ஆசிரியர்களின் சான்றிதழை சரிபார்த்து அறிக்கை தயாரித்து, தொடக்க கல்வி இயக்குனருக்கு அனுப்ப உள்ளனர்.

Related Stories: