திருமங்கலத்தை மிரட்டும் காய்ச்சல் அரசு மருத்துவமனையில் குவியும் நோயாளிகள்

திருமங்கலம், நவ.8: திருமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காய்ச்சல்  பரவுவதால் நேற்று அரசு மருத்துவமனையில் நோயாளிகள் அதிகளவில் குவிந்தனர்.

மதுரை மாவட்டம், திருமங்கலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக காய்ச்சல் பாதிப்பு அதிகளவில் உள்ளது. நகர் மற்றும் கிராமப் பகுதிகளில் தொடர்ந்து பரவி வரும் மர்மக் காய்ச்சலால் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் காய்ச்சல் பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் 1500க்கும் மேற்பட்டவர்கள் காய்ச்சல் உள்ளிட்ட வியாதிகளுக்கு சிகிச்சைக்கு வந்ததால் கூட்டம் அலைமோதியது.

பண்டிகை காலமாக இருந்ததால் தீபாவளி அன்று கூட்டம் இல்லை. ஆனால் மறுநாளான நேற்று ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கில் வெளிநோயாளிகள் வந்ததால், மருத்துவமனை வளாகத்தில் நீண்ட வரிசை நிற்கத் துவங்கியது. கட்டுக்கடங்காக கூட்டத்தினால் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க டாக்டர்கள் திணறும் நிலை ஏற்பட்டது.

 இதுகுறித்து தலைமை மருத்துவர் பூமிநாதன் கூறுகையில், `` மழைக்காலமாக இருப்பதால் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. இன்று (நேற்று) மட்டும் 1500க்கும் மேல் ஓபி சீட்டு கொடுக்கப்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. திருமங்கலம் அரசு மருத்துவமனையில் 18 படுக்கைகள் கொண்ட காய்ச்சல் வார்டு தனியாக துவக்கப்பட்டுள்ளது. இதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் தங்கி சிகிச்சை பெற்று கொள்ளலாம். சாதாரண வைரஸ் காய்ச்சல் பாதிப்பு என்றால் கூட மக்கள் மருத்துமவனைக்கு திரண்டு வருவது அதிகரித்துள்ளது’’ என்றார்.

Related Stories: