58ம் கால்வாயில் தண்ணீர் திறப்பு

உசிலம்பட்டி, நவ. 8: 58 கிராம கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டதால் இன்று(நவ.8) உசிலம்பட்டியில் நடைபெற இருந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரமாக  58 கிராம கால்வாய் திகழ்கிறது. இதில்  தண்ணீர் திறக்ககோரி அனைத்துக்கட்சி மற்றும் விவசாயிகள் சங்கத்தினர் இன்று உசிலம்பட்டியில் போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர். இதையொட்டி நேற்று உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவகத்தில் ஆர்டிஓ முருகேசன் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் 58 கால்வாயில் வைகை அணையிலிருந்து தண்ணீர் திறக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் திட்டமிட்டபடி இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் ஏற்கனவே தண்ணீர் திறக்கப்பட்ட முதல் சோதனை ஓட்டத்தை தொடர்ந்து தற்காலிகமாக தண்ணீர் நிறுத்தப்பட்டு கரைகளைப் பலப்படுத்தும் பணி நடைபெற்று முடிந்தது. அதனைத் தொடர்ந்து நேற்று முதல் சோதனை ஓட்டத்தின் தொடர்ச்சியாக பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் சிவபிரபாகர், உதவி பொறியாளர் குபேந்திரன் ஆகியோர் முன்னிலையில் 100 கன அடி  தண்ணீர் திறக்கப்பட்டது.

இந்த தண்ணீர் திறப்பை உசிலம்பட்டி எம்.எல்.ஏ நீதிபதி தலைமையில், நகரசெயலாளர் பூமாராஜா, செல்லம்பட்டி ஒன்றிய எம்.ஜி.ஆர் அணி பரமன், முன்னாள் கவுன்சிலர் பண்பாளன், வழக்கறிஞர் லெட்சுமணன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் 58ம் கால்வாயில் மலர் தூவி வரவேற்றனர். தண்ணீர் திறக்கப்பட்டதால் இன்று நடைபெற இருந்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.

Related Stories: