போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு தான் என்ன? கோரிப்பாளையம் மேம்பாலம் கட்டும் மறுஆய்விலும் சிக்கல் நிலஆர்ஜித அளவை குறைத்தும் பலனில்லை

 மதுரை, நவ. 8: மதுரை கோரிப்பாளையத்தில் மேம்பாலம் கட்டுவதற்கான மறுஆய்விலும் திடீர் சிக்கல் எழுந்துள்ளது.மதுரை நகரில் கோரிப்பாளையம் தேவர் சிலை சந்திப்பு போக்குவரத்து நெருக்கடியின் உச்சத்தில் உள்ளது. இதில் 11 சாலைகள் சந்திக்கின்றன. இப்பகுதியை அன்றாடம் மூன்றரை லட்சம் வாகனங்கள் கடக்கின்றன. இந்த நெருக்கடிக்கு தீர்வுகாண இங்கு பறக்கும் பாலம் கட்டப்படும் என 2012ம் ஆண்டு சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.இந்த பாலத்தின் மாதிரி தோற்ற வடிவம் 3 ஆண்டுகளுக்கு முன்பே தயாராகி, தூண்கள் எழுப்ப மண் பரிசோதனை உள்ளிட்ட பணிகளும் நடத்தி முடிக்கப்பட்டன. இந்த சூழலில் நில ஆர்ஜிதம், கட்டிடம் இடிப்பு உள்ளிட்ட சில பிரச்னைகள் உருவாகியதால் பணிகள் முடங்கின.

கடந்த ஜூலையில் இந்த சிக்கலை தீர்க்க நில ஆர்ஜித அளவை குறைத்து மறுஆய்வு செய்யும்படி அரசு உத்தரவிட்டது. அதன்படி நெடுஞ்சாலை துறையினர் நவீன கருவிகள் மூலம் மறுஆய்வை நடத்தினர். ஏற்கனவே திட்டமிட்ட பறக்கும் பாலத்திற்கு கூடுதல் நில ஆர்ஜிதம் செய்ய வேண்டி இருந்தது. இதனால் வட்ட வடிவ பறக்கும்நிலை பால வடிவம் கைவிடப்பட்டது.அதற்கு பதிலாக நில அளவை குறைத்து புதிய பாலத்துக்கு வடிவமைப்பை நெடுஞ்சாலை துறை பொறியாளர் குழு தயாரித்தது. இதன்படி உயர்மட்ட பாலமாக வடிவமைப்பு செய்யப்பட்டது. இந்த பாலம் அழகர்கோவில் சாலையில் தல்லாகுளம் பெருமாள் கோயில் அருகில் இருந்து ஆரம்பித்து கோரிப்பாளையம் சந்திப்பில் வைகை ஆற்று பாலத்திற்கும், செல்லூரை நோக்கியும் இரு பிரியும் வகையில் உருவானது.

சுமார் ஒன்றரை கி.மீ நீளத்தில் அமையும் இந்த உயர்மட்ட பாலத்தின் இடையில் தமுக்கம் சந்திப்பில் காந்திமியூசியம் நோக்கியும், நேரு சிலை நோக்கியும் பிரிவு பாதைகள் அமைகின்றன. மொத்தம் 11 ஆயிரத்து 384 சதுர அடி பரப்பில் அமையும் இந்த பாலத்தின் மதிப்பீடு ரூ. 131 கோடி என்றும் மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. இதற்கு அனுமதி கிடைத்து விரைவில் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.ஆனால், மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையாக சிக்கல் எழுந்து நிற்கிறது. குறைந்த அளவிலான நில ஆர்ஜிதம், கட்டிட இடிப்புக்கு கூட தடங்கல் ஏற்பட்டுள்ளது. அந்த தடங்கலை நீக்க வழி காணப்படாமல் பணி தற்போது இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து நெடுஞ்சாலை துறை பொறியாளர் ஒருவர் கூறுகையில், `` மறுஆய்வு, மதிப்பீட்டு அறிக்கை அனைத்தும் தயாராகி அரசுக்கு அனுப்பி 5 மாதங்களாகிறது. திடீரென்று உருவாக்கப்படும் இடையூறுகளால் அனுமதி அளிப்பதில் தாமதம் ஏற்படுகிறது. அந்த சிக்கல் தீர்ந்ததும் அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்’’ என்றார். அடுத்தடுத்து தலைதூக்கும் சிக்கல்களுக்கு தீர்வு ஏற்படுவது எப்போது, மேம்பாலம் கட்டுவது எப்போது என்பது பெரும் கேள்விக்குறியாக மாறியுள்ளது.

Related Stories: