. உச்ச நீதிமன்ற கட்டுப்பாடு எதிரொலி பட்டாசு விற்பனை 30 சதவீதம் சரிவு

சேலம், நவ.8: தீபாவளி பண்டிகையில் பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் கட்டுப்பாடு விதித்ததால், தமிழகத்தில் நடப்பாண்டு பட்டாசு விற்பனை 30 சதவீதம் சரிந்தது என்று வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். தீபாவளியன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை என 2 மணிநேரம் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் நேரம் நிர்ணயம் செய்தது. இதன் எதிரொலியாக பட்டாசு வெடிக்கும் நேரத்தை நிர்ணயம் செய்து, தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. அதில் தீபாவளியன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவில் 7 மணி முதல் 8 மணி வரையும் அனுமதி வழங்கியது. நீதிமன்ற அறிவிப்பால் நடப்பாண்டு எதிர்பார்த்த அளவில் பட்டாசு விற்பனை நடக்கவில்லை என்று வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.இது குறித்து சேலத்தை சேர்ந்த பட்டாசு வியாபாரிகள் கூறியதாவது:ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகைக்கு ஒரு மாதத்திற்கு முன்பே பட்டாசு உற்பத்தி செய்யும் இடங்களில் இருந்து வியாபாரிகள் ெமாத்தமாக கொள்முதல் செய்து, விற்கும் இடத்திற்கு கொண்டு வருவோம். ஆயுதபூஜைக்கு பிறகு, பட்டாசுகளை தரம் பிரித்து சில்லரை விற்பனைக்கு அனுப்பி வைப்போம்.

 தீபாவளிக்கு இரண்டு நாட்கள் முன்பு விற்பனைக்காக பட்டாசு வைக்கப்படும். நடப்பாண்டு ஒரு மாதத்திற்கு முன்பே வியாபாரிகள் பட்டாசுகளை கொள்முதல் செய்தனர். இந்நிலையில் நீதிமன்றம் பட்டாசு வெடிக்க 2 மணிநேரம் மட்டுமே நேரம் நிர்ணயித்த காரணத்தால், பட்டாசு விற்பனை சரிவர நடக்கவில்லை. இதன் காரணமாக பட்டாசுகளை மொத்த கொள்முதல் செய்த வியாபாரிகள் கவலையடைந்தனர். கடந்தாண்டு வரை தீபாவளிக்கு முந்தைய நாள் இரவு 7 மணி முதல் 10 மணி வரை பட்டாசுகள் வெடிக்கப்பட்டது.  ஆனால் நடப்பாண்டு நீதிமன்றம் நேரம் நிர்ணயம் செய்ததால், பட்டாசு வெடிக்க நிர்ணயித்த நேரத்தில் மட்டும் 75 சதவீதம் பட்டாசு வெடிக்கப்பட்டது. மற்ற நேரங்களில் 25 சதவீதம் மட்டுமே பட்டாசு வெடிக்கப்பட்டது. இதன் காரணமாக கடந்தாண்டை காட்டிலும், நடப்பாண்டு தமிழக அளவில் 30 சதவீதம் பட்டாசு விற்பனை சரிந்தது.  இவ்வாறு வியாபாரிகள் கூறினர்.

Related Stories: