சேலம் அருகே ஹாரன் அடித்ததில் இருதரப்பு மோதல் ஒருவர் கைது; 11 பேர் மீது வழக்கு

இளம்பிள்ளை, நவ.8: சேலம் அருகே ஹாரன் அடித்தது தொடர்பாக இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டார். மேலும், 11 பேர் மீது வழக்குப்பதிந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.மகுடஞ்சாவடியை சேர்ந்த மாணிக்கம், மோகன்ராஜ் ஆகியோர் அங்குள்ள பஸ் ஸ்டாப் அருகே டூவீலரில் சென்றனர். அப்போது அங்கு மக்கள் கூட்டம் அதிகளவில் இருந்ததால், தொடர்ந்து ஹாரன் அடித்துள்ளனர். இதை அங்கு  நின்றுக்கொண்டிருந்த கஞ்சமலை(41) என்பவர் தட்டிக்கேட்டுள்ளார். இதனால், வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த கஞ்சமலை, மாணிக்கத்தை தாக்கியுள்ளார். காயமடைந்த மாணிக்கம் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி தகவலறிந்த கஞ்சமலை தரப்பைச் சேர்ந்த வினோத்(29), தனது கூட்டாளிகள் 5 பேருடன் சென்று மாணிக்கத்திடம் தகராறு செய்துள்ளார்.

அப்போது அங்கிருந்த மாணிக்கம் தரப்பினர் 6 பேர், பதிலுக்கு தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த வினோத், சங்ககிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த மகுடஞ்சாவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகுமார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கஞ்சமலையை கைது செய்தார். மேலும், 11 பேர் மீதும் வழக்குப்பதிந்து தேடி வருகின்றனர். தொடர்ந்து மோதல் ஏற்படாமல் தடுக்கும் வகையில், அப்பகுதியில் 10க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: