குழாய் பதிப்பு, சாலை பணி நிறைவு பேட்டையில் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியது

பேட்டை, நவ. 8:   நெல்லை மாநகராட்சி பகுதியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அரியநாயகிபுரம் கூட்டுக்குடிநீர் திட்டம் ரூ.230 கோடி மதிப்பீட்டில் குடிநீர் வடிகால் வாரியத்தால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக அரியநாயகிபுரம் அணைக்கட்டில் இருந்து ராட்சத குழாய்கள் பதிக்கப்பட்டு தண்ணீர், பேட்ைட காமராஜர் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டு வரும் சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு வரப்படுகிறது.அங்கு தினமும் 1 கோடி லிட்டர் தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு நெல்லை மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களுக்கும் விநியோகிக்ப்பட இருக்கிறது.

இதற்காக சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து நெல்லை, மேலப்பாளையம் மண்டலத்திற்கு 2 பைப் லைன்கள், பேட்டை வழியாக பதிக்கப்பட்டன. கடந்தாண்டு செப்டம்பரில் துவங்கப்பட்டு 2 மாதத்திற்குள் பணிகள் முடிக்க திட்டமிடப்பட்டது. ஆனால் ஓராண்டை கடந்தும் பணிகள் நீடித்ததால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், வியாபாரிகள் உள்பட அனைத்து தரப்பினரும் கடும் பாதிப்பிற்குள்ளாயினர். சமீபத்தில் இந்த பணிகள் முடிவடைந்த நிலையில், சாலைப்பணியை நெடுஞ்சாலை துறை துவங்கியது. மேலும் அம்மா உணவகம் அருகே இரு கால்வாய் பாலத்திற்கான பணிகளும், அப்போது ஆரம்பமானதால் போக்குவரத்து துவங்குவதற்கு தள்ளிப்போனது.தொடர்ந்து பணிகள் முழுவதுமாக முடிக்கப்பட்டு கடந்த சில நாட்களாக பேட்டை வழியாகவே போக்குவரத்து முழுவதுமாக நடந்து வருகிறது. இதனால் பேட்டை பகுதி மக்கள், வியாபாரிகள், வாகன ஓட்டுநர்கள் நிம்மதியடைந்து உள்ளனர். இந்த பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கையும் சீராகி உள்ளது.

Related Stories: