கூட்டுறவு சங்கங்களில் உரத்தட்டுப்பாடு

ஸ்பிக்நகர், நவ. 8: தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் உரம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தனியார் உரக்கடைகளிலும் உரம் இல்லாததால் விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர்.  தூத்துக்குடி மாவட்டத்தில் அத்திமரப்பட்டி, குலையன்கரிசல், பொட்டல்காடு, முள்ளக்காடு, கோரம்பள்ளம், காலாங்கரை உள்ளிட்ட பகுதிகளில் வாழை, நெல், உளுந்து உள்ளிட்டவை சுழற்சி முறையில் பயிரிடப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் ஏத்தம் பழம் மிகவும் பிரசித்திப் பெற்றது. இங்குள்ள மண்ணில் விளையும் ஏத்தம் பழங்கள் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கும் விற்பணைக்கு கொண்டு செல்லப்படுகின்றன.தற்போது இந்த பகுதிகளில் வாழை பயிரிடப்பட்டுள்ளது. வாழை கன்று நட்டு 3 மாதம் கழித்து டிஏபி மற்றும் யூரியா உரங்கள் வைக்க வேண்டும். யூரியா 2 மூடை உரத்துடன் டிஏபி 1 மூடை உரம் கலந்து வாழைகளுக்கு வைக்க வேண்டும்.

கோரம்பள்ளம் சொசைட்டியில் டிஏபி உரம் ரூ.1165க்கும், யூரியா ரூ.266க்கும், தனியார் உரக்கடைகளில் டிஏபி ரூ.1500க்கும், யூரியா ரூ.300 முதல் 350 வரையும் விற்பனை செய்யப்படுகிறதுசொசைட்டிகளில் கடந்தாண்டு நபர் ஒருவருக்கு 10 மூடைகள் யூரியா வழங்கப்பட்டது. ஆனால் இந்தாண்டு 5 மூடையாக குறைக்கப்பட்டது. இருப்பினும் யூரியா உரம் கிடைக்கவில்லை. தனியார் உரக்கடைகளோ உரம் இல்லாததால் மூடியே கிடக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. டிஏபி தேவையான அளவு இருப்பதால் அனைவருக்கும் வழங்கப்படுகிறது.

 ஆனால் யூரியா சொசைட்டிகளில் விவசாய கடன் பெற்ற நபர்களுக்கும் சொசைட்டியை சேர்ந்த நிர்வாகிகளுக்கு மட்டுமே வழங்கப்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் ரூ.1500 மதிப்புள்ள ஜிப்சம் மற்றும் 17-17, 17-19 உரங்களில் ஏதாவது வாங்கினால் தான் 5 மூடை யூரியா வழங்கப்படும் என்று கட்டாயப்படுத்தி விற்பனை செய்யப்படுகிறது. ஏற்கனவே, கடந்த ஆண்டு வாழைகள் நல்ல விளைச்சல் இருந்தும் போதுமான விலையில்லாமல் கவலையில் உள்ளனர். விவசாயத்தையே கைவிட்டு வேறு தொழிலுக்கு சென்ற விவசாயிகள் குளங்களில் போதுமான அளவு நீர் இருப்பதால் மீண்டும் விவசாயத்தில் ஈடுபட்ட நிலையில், உரத்தட்டுப்பாடு அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.  எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு எளிதில் யூரியா உரம் கிடைக்க ஆவண செய்ய வேண்டும் என்பதே அனைத்துத்தரப்பினரின் எதிர்பார்ப்பு.

Related Stories: