போலீஸ் அலட்சியத்தால் தொடரும் சாமி சிலைகள் சேதம் குளத்தூரில் அய்யனார் சிலை உடைத்த வாலிபர் கைது

குளத்தூர், நவ. 8: தூத்துக்குடி மாவட்டத்தில் போலீஸ் அலட்சியத்தால் சாமி சிலைகள் சேதப்படுத்தப்பட்டு வரும் நிலையில் குளத்தூரில் அய்யனார் சிலையை உடைத்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் மேற்கு பகுதியில் குறுக்குச்சாலை செல்லும் சாலையோரம் அய்யனார் கோயில் உள்ளது. இங்கு குளத்தூர், பனையூர் மற்றும் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த கிராம மக்கள், விவசாயிகள் தினமும் வந்து வழிபட்டு செல்கின்றனர். கடந்த இருவாரங்களுக்கு முன்னர் இக்கோயிலில் இருந்த நாகர் சிலை மர்மநபரால் உடைத்து சேதப்படுத்தப்பட்டு பின்னர் கொள்ளை போனது. அதன் சுவடு மறைவதற்குள் நேற்று முன்தினம் அக்கோயிலில் இருந்து

வந்த அய்யனார் சிலையும் சுக்குநூறாக உடைத்து அப்பகுதியில் வீசப்பட்டிருந்தது. இந்நிலையில் கோயிலுக்கு வழக்கம்போல் நேற்று காலை தரிசிக்கசென்ற பக்தர்கள் சிலை உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

 இதுகுறித்து அவர்கள் அளித்த புகாரின்பேரில் குளத்தூர் இன்ஸ்பெக்டர் ராமலட்சுமி  வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினார். இதில் முத்துநகரை சேர்ந்த பெருமாள் மகன் தங்கமுனீஸ்வரன் (29) ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைதுசெய்து விசாரித்து வருகின்றனர். போலீசாரின் அலட்சியப்போக்கால் இதுபோன்று சாமி சிலைகள் சேதப்படுத்தப்படும் சம்பவங்கள் தொடர்வதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் குளத்தூர் தெற்கு கண்மாயில் முனியசாமி கோயிலில் விநாயகர், நாகர் சிலைகள் உடைத்து சிதைக்கப்பட்டிருந்தன.

அப்போது இதுகுறித்து உடனடியாக புகார் அளித்தும் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியத்துடன் இருந்துவிட்டனர். அதன்காரணமாகவே அதன் தொடர்ச்சியாக கடந்த  இரு வாரங்களுக்கு முன் அய்யனார் கோயிலில் இருந்த நாகர் சிலை உடைத்து கொள்ளை போனது. இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரையும் போலீசார் கண்டுகொள்ளவே இல்லை. இத்தகைய அலட்சியப்போக்கால்  நேற்று முன்தினம் அய்யனார் சிலை மீண்டும் உடைத்து சிதைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற  சம்பவங்கள் பக்தர்களிடையே தீராத வேதனையை உண்டாக்கியுள்ளது. எனவே, இனிமேலாவது இதுபோன்ற சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் போலீசார் விழிப்புடன் செயல்பட முன்வர வேண்டும். இதுவே அனைவரது எதிர்பார்ப்பு’’ என்றனர்.

Related Stories: