வேலைவாய்ப்பற்ற மாற்றுத்திறனாளி, இளைஞர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை தகுதியானோர் விண்ணப்பிக்கலாம்

தூத்துக்குடி, நவ. 8: தூத்துக்குடி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை பெற தகுதியானோர் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பேச்சியம்மாள் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் பல ஆண்டுகளாக காத்திருக்கும் இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

 தொலைதூரக் கல்வி அல்லது அஞ்சல் வழி மூலம் கல்வி கற்பவர்கள் உதவித் தொகை பெறலாம். ஏற்கனவே உதவித்தொகை பெற்று வருபவர்கள் தொடர்ந்து 3 ஆண்டுகள் வரை உதவித்தொகை பெற நாளது தேதி வரை வங்கிகளில் குறிப்புகள் இடப்பட்ட வங்கிக்கணக்கு புத்தக நகலுடன் சுயஉறுதி மொழி ஆவணத்தையும் பூர்த்தி செய்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஒப்படைத்து தொடர்ந்து உதவித்தொகை பெறலாம். இருப்பினும் இதில் சுய உறுதிமொழி ஆவணம் சமர்ப்பிக்காத பயனாளிகளுக்கு உதவித்தொகை நிறுத்தப்படும். அத்துடன்  மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது.

 எனவே, இம்மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டுகள் நிறைவு பெற்றவர்கள் உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கலாம். 10ம் வகுப்பு மற்றும் அதற்கு கீழ் படித்தவர்களுக்கு மாதம் ரூ.600 வீதமும் பிளஸ்2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.750 வீதம், பட்டதாரிகளுக்கு ரூ.1000 வீதம் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. வேறு எந்த ஒரு அலுவலகத்திலும் உதவித்தொகை பெறக்கூடாது. இந்த உதவித் தொகை பெற தகுதியான நபர்கள்  அனைத்துக் கல்விச் சான்றுகள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றுடன்  ஆசிரியர் காலனி, முதல்தெரு (கிழக்கு) பாண்டியன் கிராம வங்கியின் பின்புறம் தூத்துக்குடியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நவம்பர் 28ம் தேதிக்குள் நேரில் வந்து இலவசமாக விண்ணப்பம் பெற்றுக்கொள்ளலாம். மேலும் விண்ணப்பங்கள் அனைத்து வேலை நாட்களிலும் ஆண்டு முழுவதும் வழங்கப்படும். மேலும் உதவித்தொகை பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது எனவும் உதவித்தொகை பெறுவதால் வேலைவாய்ப்பு பரிந்துரைத்தலுக்கு எவ்வித தடையும் ஏற்படாது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories: