சென்னை தாம்பரம்- நெல்லை மார்க்கத்தில் இயக்கப்படும் அந்தியோதயா ரயில் கோவில்பட்டியில் நின்று செல்லுமா? பயணிகள் எதிர்பார்ப்பு

கோவில்பட்டி, நவ. 8: சென்னை  தாம்பரம்- நெல்லை இடையே இயக்கப்படும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயில்  கோவில்பட்டியில் நின்றுசெல்லுமா? என்ற எதிர்பார்ப்புடன் பயணிகள் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தென் மாவட்ட  ரயில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு அறிமுகப்படுத்தப்பட்ட சென்னை தாம்பரம்- நெல்லை இடையேயான முற்றிலும் முன்பதிவில்லா பெட்டிகளை கொண்ட  அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயில் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. சென்னை  தாம்பரத்தில் இருந்து நண்பகல் 12.30 மணிக்கு புறப்படும் இந்த ரயில் மறுநாள்  அதிகாலை 3.30 மணியளவில் நெல்லை சந்திப்பை சென்றடைகிறது. இதேபோல்  மறுமார்க்கமாக அதாவது நெல்லை சந்திப்பில் இருந்த மாலை 5.30 மணிக்கு  புறப்படும் இந்த ரயில் மறுநாள் காலை 9.45 மணியளவில் தாம்பரத்தை  சென்றடைகிறது.

 மணிக்கு 42 கி.மீ. வேகத்தில் செல்லும் இந்த  ரயில் மொத்தம் 692 கி.மீ. தொலைவை பதினாறரை மணி நேரத்தில்  சென்றடைகிறது. நெல்லையில் இருந்து புறப்படும் இந்த ரயில்  விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம்,  மயிலாடுதுறை, விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக தாம்பரத்தை சென்றடைகிறது.  இதே வழித்தடங்கள் வழியாக தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கு இந்த ரயில்  பயணிக்கிறது. மொத்தம் 9 ரயில் நிலையங்களில் இந்த ரயில் நின்று பயணிகளை  ஏற்றி இறக்கி செல்கிறது. இருந்தபோதும் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நின்று செல்லாதது தூத்துக்குடி மாவட்ட  மக்கள் இடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக நெல்லையில்  புறப்படும் இந்த ரயிலானது அடுத்த நிறுத்தமாக விருதுநகர் மாவட்டம்  விருதுநகர் ரயில் நிலையத்தில் மட்டுமே நின்று செல்கிறது. இதனால்  நெல்லை-விருதுநகருக்கும் இடைப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையங்களில் ஏதேனும் ஒன்றில்கூட இந்த ரயில் நிற்பதில்லை. குறிப்பாக  நெல்லை-விருதுநகர் இடையே மிகப்பெரிய ரயில் நிலையமாக கோவில்பட்டி ரயில்  நிலையம் உள்ளது. மதுரை ரயில்வே கோட்டத்திலேயே நெல்லைக்கு அடுத்து அதிக  வருவாயை குறிப்பாக அதாவது ஆண்டுக்கு ரூ.2 கோடி வரை வருவாயை ஈட்டித்  தருகிறது. இத்தகைய சிறப்புமிக்க கோவில்பட்டி ரயில் நிலையத்தில் இந்த எக்ஸ்பிரஸ் ரயில் நின்று செல்லாதது பயணிகள் மத்தியில்  பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்றால் மிகையாகாது.

கோவில்பட்டி நகரானது தீப்பெட்டி, பட்டாசு,  நூற்பாலைகள், கல்வி மற்றும் தொழில் நிறுவனங்கள் நிறைந்த பகுதியாக  திகழ்கிறது. நாளுக்குநாள் கல்வி மற்றும் பொருளாதாரத்தில் வளர்ச்சி பெறும்  வரும் கோவில்பட்டி பகுதியில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் ரயில்  பயணத்தை நாடி செல்கின்றனர். இங்குள்ள ஆன்மிகவாதிகள், பக்தர்கள் அடிக்கடி சுற்றுலா செல்லும் பயணிகள் என அனைத்துத்தரப்பு மக்களும் ஆன்மிக ஸ்தலங்கள் மற்றும் சுற்றுலா ஸ்தலங்களுக்கு அடிக்கடி  செல்கின்றனர். குறிப்பாக தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, மதுரை போன்ற  ஊர்களில் உள்ள கோயில்களுக்கு பெரும்பாலானோர் ரயில்கள் மூலம் செல்வதையே விரும்புகின்றனர்.

 தற்போது திருச்செந்தூரில் இருந்து சென்னை வரை இயக்கப்பட்டு வரும்  தினமும் எக்ஸ்பிரஸ் ரயில் கும்பகோணம், தஞ்சாவூர் போன்ற ஊர்கள் வழியாக  செல்கிறது. இந்த திருச்செதூர் எக்ஸ்பிரஸ் ரயில் கோவில்பட்டி ரயில்  நிலையத்தில் வந்து நின்று பயணிகளை ஏற்றி இறக்கி சென்றாலும், தினமும் இந்த  ரயிலில் பயணிகளின் கூட்டம் அதிகரித்த வண்ணம் உள்ளது.  இதனால்  இத்தகைய கோயில்கள் மற்றும் சுற்றுலா ஸ்தலங்கள் நிறைந்த ஊர்களுக்கு  செல்வதற்கு பக்தர்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் பயணிகள் போதிய ரயில்  வசதிகள் இல்லாமல் சிரமப்படுகின்றனர். இதனால் நெல்லை- தாம்பரம் இடையேயான இயக்கப்படும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலை கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நின்று  செல்லுமா? என்ற எதிர்பார்ப்பு பயணிகள் மத்தியில் எழுந்துள்ளது. இதுகுறித்து  மதுரை ரயில்வே கோட்ட உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும்.

Related Stories: