டெங்கு, பன்றிக்காய்ச்சல் வந்தால் கவனக் குறைவாக இருக்கக்கூடாது வேலூரில் சுகாதாரத்துறை செயலாளர் பேட்டி தமிழகத்தில் 19.75 லட்சம் மாத்திரைகள் இருப்பு

வேலூர், நவ.8:டெங்கு, பன்றிக்காய்ச்சல் வந்தால் மக்கள் கவனக் குறைவாக இருக்கக்கூடாது என்று வேலூரில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

தமிழகத்தில் டெங்கு, பன்றிக்காய்ச்சல் தடுக்கும் வகையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ் நிலையம், சினிமா தியேட்டர், திருமண மண்டபம், பஸ்கள், ஆட்டோ ஆகியவற்றை தூய்மை செய்யும் வாரம் கடந்த 7ம் தேதி தொடங்கியது. வருகிற 14ம் தேதி வரை இது கடைபிடிக்கப்பட உள்ளது.அதன்படி, வேலூர் புதிய பஸ் நிலையத்தில் கைகழுவும் முறை மற்றும், பஸ்கள், ஆட்டோக்களை தூய்மை செய்யும் பணிகளை மாநில சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் துண்டு பிரசுரங்கள் கொடுத்து தொடங்கி வைத்தார். அப்போது கலெக்டர் ராமன், மாநகராட்சி கமிஷனர் சிவசுப்பிரமணியன், மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் யாஸ்மின், 4வது மண்டல உதவி கமிஷனர் மதிவாணன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

பின்னர் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகத்தில் செப்டம்பர் மாதம் வரை காய்ச்சல் எண்ணிக்கை குறைந்திருந்தது. அக்டோபர் மாதத்தில் காய்ச்சல் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தற்போது போர்க்கால நடவடிக்கைகளால் காய்ச்சல் குறைந்துள்ளது.டெங்கு, பன்றிக்காய்ச்சல் வந்தால் மக்கள் கவனக் குறைவாக இருக்கக்கூடாது. அதுகுறித்து பீதியடைய வேண்டாம். அனைத்து துறையினர் மூலம் பன்றிக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பன்றிக்காய்ச்சலை தடுக்க கை கழுவும் வழக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான திருமண மண்டபம், தியேட்டர், ஆட்டோ, பஸ்கள் ஆகியவற்றை சிறிது லைசால் மூலம் தூய்மை செய்யும் பணிகள் நடந்து வருகிறது. தமிழகத்தில் பன்றிக்காய்ச்சலை தடுக்கும் வகையில் நடமாடும் 416 பெரிய ஆம்புலன்ஸ், 770 ஜீப்கள், 1200 காய்ச்சல் முகாம்கள் மட்டுமன்றி அரசு மருத்துவமனை, சுகாதார நிலையங்களில் தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.

காய்ச்சலுக்கு போலி மருத்துவர்களை அணுகக்கூடாது. தானாகவே மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டாம். காய்ச்சல் குறித்து மருத்துவரிடம் சென்று காய்ச்சல் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். தமிழகத்தில் கடந்த ஆண்டு பன்றிக்காய்ச்சலுக்கு 3,800 பேர் பாதிக்கப்பட்டு, அதில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்தாண்டு தமிழகத்தில் 1020 பேர் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 8,025 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் தடுக்க 19.75 லட்சம் மாத்திரைகள் இருப்பு உள்ளது. காய்ச்சல் அறிகுறி உள்ளவர்கள் மாத்திரை உடனடியாக சாப்பிட்டால் இறப்பை தடுக்க முடியும்.கடந்த 5 நாட்களில் காய்ச்சல் பாதித்தவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. வார்டுகளில் நடத்தப்படும் முகாமை விட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ் நிலையங்களில் நடத்தப்படும் விழிப்புணர்வு பொதுமக்களை எளிதில் சென்று அடையும்.

Related Stories: