சென்னை விமான நிலையம் எதிரே சாலையை ஆக்கிரமித்த மொபைல் உணவகங்கள்

பல்லாவரம்: சென்னை விமான நிலையம் எதிரே சாலையை ஆக்கிரமித்து உணவகங்கள் நடத்தப்படுவதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.சென்னை விமான நிலையமானது, உள்நாடு மற்றும் வெளிநாட்டு விமான போக்குவரத்திற்கு பிரசித்தி பெற்றது. தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்வதுண்டு. இதனால் சென்னை விமான நிலைய பிரதான சாலையான ஜிஎஸ்டி சாலையானது, எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும். தற்போது, மெட்ரோ ரயில் பணிக்கான வேலை நடந்து வருவதால் கூடுதல் நெரிசல் மிகுந்து காணப்படுகிறது.இந்நிலையில், சமீப காலமாக சென்னை விமான நிலையம் எதிரேயுள்ள ஜிஎஸ்டி சாலையை ஆக்கிரமித்து தனி நபர்கள் சிலர், தங்களது வாகனங்களை நிறுத்தி, அதனையே உணவகமாக மாற்றி விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு சாலையில் விற்பனையில் ஈடுபடும் உணவகத்தை நாடி, அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் திடீர் பிரேக் போட்டு திருப்ப முயல்வதும், சாலையில் ஆங்காங்கே தாறுமாறாக வாகனங்களை நிறுத்தியும் உணவு சாப்பிட்டு செல்கின்றனர். இதனால் பின்னால் வேகமாக வரும் வாகனங்கள் நிலைதடுமாறி முன்னால் செல்லும் வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்படுகிறது.

பாதிக்கப்படும் வாகன ஓட்டிகள், உணவக உரிமையாளரிடம் கேட்டால், அவர்களை மிரட்டுவதோடு இல்லாமல், யார் யாருக்கு என்ன கொடுக்கணுமோ அதையெல்லாம் கொடுத்துதான் தொழில் நடத்துகிறோம். உங்களால் முடிந்ததை பார்த்து கொள்ளுங்கள்’’ என்று ஒருவித அதிகார தொணியில் பேசுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் விபத்துக்குள்ளாகும் வாகன ஓட்டிகள் புலம்பியவாறே அந்த இடத்தை விட்டு நகர்கின்றனர்.ஏரி, குளங்களை ஆக்கிரமித்த காலம் போய், சென்னை விமான நிலைய பிரதான சாலையையே ஆக்கிரமித்து, உணவகம் நடத்தும் நிலை சென்னையில் அரங்கேறி உள்ளது.  இதுகுறித்து சம்மந்தப்பட்ட உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.

Related Stories: